ஜம்மு காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுத
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எந்த நேரத்திலும் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்குவதற்கான காலக்கெடு உள்ளதா என்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து தகவல்களைப் பெறுமாறு இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் மற்றும் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் (எஸ்ஜி) ஆகியோரை இரண்டு நாட்களுக்கு முன்பு கேட்டுக் கொண்டு இருந்தார். இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான எஸ்.ஜி.மேத்தா, வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அது கணிசமான அளவு நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் சிறிது மீதம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் எஸ்ஜி மேத்தா கூறுகையில், ''மூன்று தேர்தல்கள் நடைபெற உள்ளன. மூன்று அடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு 2019 க்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள், கல் வீச்சு சம்பவங்கள் 97.2 சதவீதம் குறைந்துள்ளன. தேர்தல் எப்போது நடத்த வேண்டும் என்பதற்கான அறிகுறிகள் மற்றும் புள்ளி விவரங்கள் இவை. பாதுகாப்பு வீரர்களின் உயிரிழப்பு 65.9% குறைக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து தொடர்பாக உறுதியான தேதியை தற்போது கூற முடியாது.
போலீஸ் நடவடிக்கையால் மட்டும் அமைதி திரும்பிவிடாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமானது இல்லை. எனவே, மாநில அந்தஸ்து வழங்கப்படுவதற்கான தேதியை தற்போது எங்களால் கூற முடியாது. இந்த முறையில் தான் ஜம்மு காஷ்மீரை முழுமையாக ஒரு மாநில அந்தஸ்து பெறுவதற்காக தயார்படுத்தி வருகிறோம்.
கடந்த 2022ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 1.8 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நடப்பு 2023 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மத்திய அரசு எடுத்திருந்த நடவடிக்கைகளுக்கு கிடைத்த பலனாக இவை பார்க்கப்படுகிறது. யூனியன் பிரதேசமாக இருக்கும் வரை மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க முடியும்'' என்றார்.
பதில் அளித்துப் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், ''இந்த விவகாரத்தில் அரசியலமைப்புத் தன்மையை தீர்மானிப்பதில் மத்திய அரசின் பதில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. இந்த வழக்கின் அரசியலமைப்புத் தன்மையை நாங்கள் தீர்மானிப்போம்" என்றார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசு கொண்டு வந்து இருப்பதாக எஸ்.ஜி.மேத்தா கூறிய கருத்துககளை மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மறுத்தார். கபில் சிபல் பதில் அளிக்கையில், ''5,000 பேரை வீட்டுக் காவலில் வைத்து, 144 தடை விதித்தால், பந்த் நடக்காது. யூனியன் பிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. இவை எல்லாம் அரசாங்கத்தின் வேலையாக ஒளிபரப்பப்பட்டு பிரச்சனையாக உருவாகி வருகிறது'' என்றார்.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 1957 இல் கலைக்கப்பட்ட முன்னாள் மாநிலத்தின் அரசியலமைப்புச் சபையானது சட்டமன்றம் என்ற கோரிக்கையுடன் உடன்படவில்லை.