93-வது இந்திய விமானப்படை தின கொண்டாட்டத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தான் பகுதிகளின் பெயர்களில் உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த மெனு கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று (அக்டோபர் 8) 93-வது இந்திய விமானப்படை தின கொண்டாட்டங்கள் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கோலாகலமாக நடைபெற்றன.

இந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.

இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற விமானப்படை தின விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த விருந்தின் மெனு, பாகிஸ்தானைக் கிண்டலடிக்கும் விதமாக 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) தாக்குதலின்போது இந்தியா குறிவைத்த பாகிஸ்தானின் இடங்களின் பெயரால் பெயரிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தானை கிண்டில் செய்யும் உணவுகள்

ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா (Rawalpindi Chicken Tikka Masala), ரஃபிகி ராரா மட்டன் (Rafiqi Rara Mutton), போலாரி பனீர் மேத்தி மலாய் (Bolari Paneer Methi Malai), சுக்கூர் ஷாம் சவேரா கோஃப்தா (Sukkur Shyam Savera Kofta), சர்கோதா தல் மக்கானி (Sargodha Dal Makhani), ஜகோபாபாத் மேவா புலாவ் (Jacobabad Mewa Pulao), பகவல்பூர் நான் (Bahawalpur Naan) ஆகியவை பரிமாறப்பட்டன.

பாலாகோட் டிராமிசு (Balakot Tiramisu), முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா (Muzaffarabad Kulfi Falooda), முரிட்கே மீத்தா பான் (Muridke Meetha Paan) போன்ற இனிப்பு வகைகளும் மெனுவில் இடம்பிடித்தன.

வைரலான மெனு

இந்த மெனுவின் புகைப்படம் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போலப் பரவி வருகிறது. பலரும் இந்த நகைச்சுவையான முயற்சி குறித்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி 26 உயிர்களைப் பறித்த தாக்குதலுக்குப் பதிலடியாக, மே 7ஆம் தேதி இரவு பாகிஸ்தானில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.

அந்த தாக்குதலில் குறிவைக்கப்பட்ட இடங்களின் பெயர்களை விமானப்படையினர் தற்போது தங்கள் விருந்து மெனுவில் இடம்பெறச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.