பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழு, 'ஜமாத்-உல்-மோமினாத்' என்ற பெயரில் தனது முதல் மகளிர் பிரிவைத் தொடங்கியுள்ளது. மசூத் அஸாரின் சகோதரி சாதியா அசார் தலைமையில் இயங்கும் இந்தப் பிரிவு, ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாதக் குழு 'ஜமாத்-உல்-மோமினாத்' (Jamaat-ul-Mominaat) என்ற பெயரில் தனது முதல் மகளிர் பிரிவை அறிவித்துள்ளது.

ஜெயஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசார் (Maulana Masood Azhar) பெயரில் வெளியிடப்பட்ட கடிதம் மூலம் இதனை அறிவித்துள்ளது. இந்தப் புதிய பிரிவுக்கான ஆள் சேர்ப்புப் பணிகள் பஹவல்பூரில் அக்டோபர் 8 அன்று தொடங்கியுள்ளன.

இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' (Operation Sindoor) தாக்குதலில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் அழிக்கப்பட்டதை அடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சாதியா அசார்?

தகவல்களின்படி, ஜெயஷ்-இ-முகமதுவின் இந்தப் பெண்கள் பிரிவுக்கு மசூத் அஸாரின் சகோதரி சாதியா அசார் (Sadiya Azhar) தலைமை தாங்குவார். சாதியா அஸாரின் கணவர் யூசுப் அசார் (Yusuf Azhar) மே 7 அன்று 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின்போது கொல்லப்பட்டார்.

இந்த பயங்கரவாத அமைப்பு, அதன் உறுப்பினர்களின் மனைவிகளை புதிய பிரிவில் சேர்க்கத் தொடங்கியுள்ளது. மேலும், பஹவல்பூர், கராச்சி, முசாபராபாத், கோட்லி, ஹரிபூர், மன்செஹ்ரா ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்களில் பயிலும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களையும் இந்தப் பிரிவில் சேர்க்கத் தொடங்கியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மகளிர் பிரிவின் நோக்கம் என்ன?

ஜெயஷ்-இ-முகமதுவின் இந்த மகளிர் பிரிவு, உளவியல் போர் (Propaganda) மற்றும் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் எனக் கூறப்படுகிறது. 'ஜமாத்-உல்-மோமினாத்' பிரிவின் செயல்பாடுகள் சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் வழியாகப் பரவி வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மற்றும் தென் இந்தியாவின் சில பகுதிகளிலும் இது ஆன்லைன் நெட்வொர்க்குகள் மூலம் செயல்படத் தொடங்கியுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஐஎஸ்ஐஎஸ், போகோ ஹராம், ஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் போன்ற பயங்கரவாதக் குழுக்கள் பெண்களைத் தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தியுள்ளன. ஆனால், ஜெயஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் பெரும்பாலும் பெண்களை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.