கன்னட நடிகை ரண்யா ராவ், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தன்னை விசாரணையின்போது மனரீதியாகத் துன்புறுத்தியதாக நீதிமன்றத்தில் கதறி அழுதபடி கூறினார். ரூ.14.56 கோடி தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் கடந்த ஒரு வருடத்தில் 27 முறை துபாய் சென்றுள்ளார்.

தங்கம் கடத்தல் (Gold Smuggling) வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ் (Ranya Rao) திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் நீதிபதிகள் முன்பு கதறி அழுதார். வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் (DRI) அதிகாரிகள் தன்னை காவலில் வைத்து சித்திரவதை செய்வதாகவும் தெரிவித்தார்.

தான் அதிகாரிகளால் மிரட்டப்பட்டதாகவும் மன உளைச்சல் ஏற்படுத்தியதாவும் கூறினார். ரண்யா ராவுக்கு மார்ச் 24 வரை நீதிமன்ற காவல் (Judicial Custody) விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது ஜாமீன் மனு (Bail Plea) மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

வீடியோ பதிவ செய்யப்பட்ட விசாரணை:

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ரன்யா ராவிடம் உடல் ரீதியாக ஏதேனும் துன்புறுத்தல் செய்யப்பட்டதா என்று கேட்டது. அதற்கு நடிகை உடல் ரீதியான துன்புறுத்தல் எதுவும் நடக்கவில்லை, ஆனால் மனரீதியாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறினார். இருப்பினும், நடிகையின் குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் மறுத்தனர். கைது மற்றும் விசாரணை முழுவதும் சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ரன்யா ராவின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் சமூக வலைதளங்களில் அவரது சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. அதில் அவரது முகத்தில் வீக்கம் மற்றும் காயம் ஏற்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. இதனால் அவர் காவலில் சித்திரவதை செய்யப்பட்டடாரா என்று சந்தேகம் கிளம்பியது.

இதனிடையே, கர்நாடக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, இது குறித்து அதிகாரப்பூர்வ புகார் பதிவு செய்யப்படும் வரை ஆணையத்தின் சார்பில் விசாரணை நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.

ரன்யா ராவ் மார்ச் 3ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் துபாயிலிருந்து திரும்பியபோது, ​​அவரிடமிருந்து 14.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 14.56 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தை மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராமச்சந்திர ராவ் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகியுள்ளார். "எனது தொழில் களங்கமற்றதாக இருந்தது. 4 மாதங்களுக்கு முன்பு அவரது திருமணம் நடந்ததில் இருந்து மகளுடன் நான் தொடர்பில் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.

DRIக்கு எப்படி சந்தேகம் வந்தது?

ரன்யா ராவின் சந்தேகத்திற்கிடமான துபாய் பயணங்கள் காரணமாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அவரது பயணங்கள் குறித்து விசாரித்துள்ளனர். பதிவுகளின்படி, ரன்யா ராவ் 15 நாட்களில் நான்கு முறை துபாய் சென்றுவந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 27 முறை துபாய் சென்றுள்ளார். தங்கத்தை உடலில் அணிந்துகொண்டும், ஆடைகளில் மறைத்தும் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட பின்னர், அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் 2.67 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ரன்யா ராவ் தவிர மேலும் இரண்டு பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட டி. ராஜ் என்பவர் நடிகையுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும், தருண் கொண்டராஜு என்பவர் துபாயில் அவருடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.