கார்கேவை கடவுள் அழைத்துக்கொள்வார்! பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்
"மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 80 வயதாகிறது. கடவுள் அவரை எப்போது வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம்" என்று பாஜக எம்எல்ஏ மதன் பேசியுள்ளார்
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எதிராக பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் சமீபத்தில் கூறிய கருத்தை காங்கிரஸ் எம்பி ரந்தீப் சுர்ஜேவாலா கடுமையாக சாடியுள்ளார். கார்கே மீதான இந்த வெறுப்புப் பேச்சு அருவருப்பானது என்று கூறியுள்ளார்.
"கர்நாடகாவின் வரலாற்றில் பட்டியலினத்தைச் சேர்ந்த மிக உயர்ந்த தலைவர் கார்கே. அவர் மீது பாஜக தலைவர்களின் வெறுப்பு கர்நாடக மண்ணின் மைந்தரை துஷ்பிரயோகம் செய்வது, அருவருப்பானது, ஏற்றுக்கொள்ள முடியாதது, கண்டிக்கத்தக்கது" என சுர்ஜேவாலாவை விமர்சித்துள்ளார். பாஜக எம்எல்ஏ மதன் திலாவரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது கருத்துகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பாஜக எம்எல்ஏ மதன் திலாவர், “மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 80 வயதாகிறது. கடவுள் அவரை எப்போது வேண்டுமானாலும் அழைத்துச் செல்லலாம். ஆனால் அவர் 200 ஆண்டுகள் வாழ பிரார்த்திக்கிறேன்” என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கார்கே கூறிய கருத்து அரசியல் கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. கலபுர்கியில் பிரச்சாரம் செய்தபோது, பிரதமர் மோடி ஒரு 'விஷ பாம்பு' போன்றவர் என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். பின்னர், தான் பிரதமர் மோடியைக் குறித்து அவ்வாறு பேசவில்லை என்றும் பாஜகவின் சித்தாந்தத்தையே விமர்சித்ததாகவும் விளக்கம் அளித்தார்.
இந்தப் பேச்சின் எதிரொலியாக பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தன்னை 91 முறை அவதூறாகப் பேசியிருப்பதாகக் கூறினார். இதனால், கடந்த சில நாட்களாக இரு கட்சியினரும் மாறிமாறி வசைபாடி வருகிறார்கள். கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
கார்கேவின் 'விஷ பாம்பு' கருத்துக்கு பதிலளித்த மூத்த பாஜக தலைவர் பசங்கவுடா பாட்டீல் யத்னால், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விஷக்கன்னி என்றும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முகவர் என்றும் கூறினார்.
மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, பிரதமர் மோடியை 'உதவாக்கரை' என்று சாடினார். ஆனால், அது குறித்த குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளதுடன், அவர் ஒருபோதும் அப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண குழு: மத்திய அரசு உறுதி