ஆங்கிலம் பேசும் வழக்கறிஞர், நீதிபதிகளுக்கு இந்தியர் என்ற எண்ணம் இருக்கவேண்டும்: அமைச்சர் கிரிண் ரிஜிஜு
ஆங்கிலம் பேசும் வழக்கறிஞர்களுக்கு வெளிநாட்டு எண்ணங்கள் இருப்பது முறையல்ல என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு போன்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்த பல நல்ல வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் ஆங்கிலத்தில் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் எண்ணங்களில் இந்தியராக இருப்பது முக்கியம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் மகாராஷ்டிரா கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஆங்கிலம் பேசும் வழக்கறிஞர்களுக்கு வெளிநாட்டு எண்ணங்கள் இருப்பது முறையல்ல எனவும் குறிப்பிட்டார்.
“ஆங்கிலத்தில் சிந்திக்கும், ஆங்கிலத்தில் பேசும் வழக்கறிஞர்கள் ஏராளம். ஆனால் அவர்களுக்கு அந்நிய சிந்தனைகள் இருந்தால், அது சரியல்ல. நீங்கள் ஹார்வர்ட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்திருக்கலாம். நீங்கள் ஒரு நல்ல வழக்கறிஞராக இருக்கலாம், நீதிபதி ஆகியிருக்கலாம். ஆனால் எண்ணங்களில் இந்தியராக என்ற உணர்வுடன் பணிவாக இருக்கவேண்டும்” என சட்டத்துறை அமைச்சர் கூறினார்.
தன்பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண குழு: மத்திய அரசு உறுதி
ஆங்கிலம் பேசும் வழக்கறிஞர்கள் உள்ளூர் மொழிகளில் பேசுபவர்களைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார். ஆங்கிலத்தின் பேசுவதன் அடிப்படையில் வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து டெல்லி நீதிமன்றத்தின் ஒரு கருத்தை அவர் மேற்கோள் காட்டினார். ஆங்கிலம் நன்றாகப் பேசும் வழக்கறிஞரைவிட இந்திய மொழிகளில் பேசும் வழக்கறிஞர்கள் திறமையானவர்களாக இருக்க முடியும் என்ற உண்மையைப் புறக்கணிப்பது முறையல்ல என்று ரிஜிஜு கூறினார்.
“சுப்ரீம் கோர்ட்டில் சில வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள், அவர்களின் சட்ட அறிவைப் பொருட்படுத்தாமல், அவர்கள் நன்றாக ஆங்கிலம் பேசுவதால் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். நல்ல ஆங்கிலத்தில் பேசுவதால் அதிக சம்பளம் வாங்குவது சரியல்ல. யோசித்துப் பாருங்கள், மராத்தி, இந்தி மொழிகளில் நல்ல தேர்ச்சி பெற்ற வழக்கறிஞர்கள் உள்ளனர், ஆனால் அவர்களின் கட்டணம் குறைவாக இருக்கும், ஏனெனில் அவர்களால் ஆங்கிலத்தில் பேச முடியாது”என்று அவர் கூறினார்.
உலக வங்கி தலைவர் ஆகிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா
மேலும், இதுபோன்ற போக்கு நாட்டுக்கு நல்லதல்ல என்றும், சட்டத்துறையினர் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். நமது நீதிமன்றங்கள் இந்திய மொழிகளை விட ஆங்கிலத்தை விரும்புவதன் விளைவுதான் இந்த நிகழ்வு என்று ரிஜிஜு கூறினார். எனவே, நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அதிக பிராந்திய மொழிகளைப் பயன்படுத்துவதை பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு அவர் பரிந்துரைத்தார்.
விழாவில் அமைச்சரின் இந்த உரை குறித்து பார் கவுன்சில் ட்விட்டரில் பதிவிட்டது. அதனை ரீ-ட்வீட் செய்த அமைச்சர் கிரிண் ரிஜிஜு, ஆங்கிலம் கற்பதிலும் பேசுவதிலும் தவறில்லை ஆனால் ஒரு இந்தியனாக இந்திய மொழிகளில் சிந்திக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதம் ரூ.5,000 சேமித்தால் போதும்! 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சமாக மாறும்!