Asianet News TamilAsianet News Tamil

ஏழை அப்பாவி மீது சுமை வச்சிட்டீங்க... இந்த அநீதிய என்னன்னு சொல்றது? மத்திய பட்ஜெட்டால் பயங்கர கோபத்தில் ராமதாஸ்

அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது. இது அநீதியாகும், வாழ்வாதாரங்களை பெருக்கவும் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.

Ramadoss Totally upset regards central budget
Author
Chennai, First Published Jul 6, 2019, 10:39 AM IST

அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது. இது அநீதியாகும், வாழ்வாதாரங்களை பெருக்கவும் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்; நாடாளுமன்றத்தில் 2019-20ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்கவும், வாழ்வாதாரங்களை பெருக்கவும் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

மாதாந்திர வருவாய் பிரிவினர் தங்களது வருமானத்தில் பெரும்பகுதியை வருமானவரியாக செலுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை இப்போதுள்ள 2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பினராலும் எழுப்பப்பட்டு வந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. ஆண்டு வருமானம் ரூ.2 கோடி முதல் 5 கோடி வரையிலும், 5 கோடிக்கு அதிகமாக இருப்பவர்களுக்கும் முறையே 3%, 7% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 2013-14 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 78% அதிகரித்திருப்பதாகவும், வரி செலுத்துவோர் எண்ணிக்கை 48% அதிகரித்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதன் பயன்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மத்திய அரசு தவறிவிட்டதான் மூலம் நடுத்தர வர்க்கத்தினரின் நலனில் அக்கறை இல்லை என்பதை நிரூபித்துள்ளது.

ரூ.45 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகளை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வாங்குபவர்கள், அதற்கான வீட்டுக்கடன் மீது செலுத்தும் வட்டியில் கூடுதலாக 1.5 லட்சத்திற்கு வரிச்சலுகை வழங்கப் படும் என்று அறிவித்துள்ளது. இதனால் பெரிய அளவில் எந்த பயனும் கிடைத்து விடாது. ஏற்கனவே ரூ.2 லட்சம் வரையிலான வட்டிக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது ரூ.3.5 லட்சம் வரையிலான வட்டிக்கு வரிச்சலுகை கிடைக்கும். ஆனால், ரூ.45 லட்சம் வரை மதிப்புள்ள வீட்டுக்கு அதிகபட்சமாக ரூ.36 லட்சம் மட்டுமே கடன் பெற முடியும் என்ற நிலையில், அதன்மீது ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் தான் ரூ.3.5 லட்சம் வட்டி கட்ட வேண்டியிருக்கும். அதன்பின்னர் இச்சலுகையால் எந்த பயனும் இருக்காது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் மீது ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருப்பது அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது. இது அநீதியாகும்.

அதேபோல், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 விழுக்காட்டிலிருந்து 12.5% ஆக உயர்த்தி இருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்ததால், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்கான, இடைக்கால ஏற்பாடாகவே இறக்குமதி வரி அறிமுகம் செய்யப்பட்டது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை சரியானதும் இந்த வரி ரத்து செய்யப்படும் என்று அப்போதைய காங்கிரஸ் அரசும், அதன்பின் பதவியேற்ற மோடி தலைமையிலான அரசும் அறிவித்திருந்தன. ஆனால், அந்த வரியை ரத்து செய்யாதது ஒருபுறமிருக்க, அதை 12.5% ஆக அதிகரித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. ஏற்கனவே, தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கிவரும் நேரத்தில் இந்த வரி உயர்வால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.700 வரை உயரக்கூடும். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரிவிதிப்பின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டி பேசினார். ஆனால், அவர் அறிவித்துள்ள வரி உயர்வுகள் பிசிராந்தையார் கூறிய அறிவுரைகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்திருக்கின்றன.

அதேநேரத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அறிவிக்கப் பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியவை ஆகும். அதேபோல், மறைமுக வரிகள் பிரிவில் சில பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை ஆகும். வேளாண்துறை வளர்ச்சிக்காக அத்துறையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

நீர்வளத்துறை அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து எதுவும் அறிவிக்கப்படாததும், குறிப்பாக தமிழகத்திற்கு பயனளிக்கும் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் குறித்து எதுவும் இடம் பெறாததும் மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் வளர்ச்சி என்ற போர்வை போர்த்தி மூடப்பட்டிருந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கைகள் வரிச்சுமை சற்று அதிகமாகவே உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios