கர்நாடக சட்டப்பேரவையின் வலிமை 211 ஆக குறைந்து விடும். ஆட்சு அமைக்கத் தேவையான பெரும்பான்மை 106 ஆக குறைந்து விடும். இப்போது 105 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாரதிய ஜனதா சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கும். பதவி விலகிய 14 சட்டப்பேரவை உறுப்பினர்கர்களின் நிலை என்ன? புட்டுப்புட்டு வைத்துள்ளார் ராமதாஸ்.

மாநிலம் தாண்டிய அவரின் அரசியல் கணிப்பு மிஸ் ஆகாமல் நடந்துகொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். ஏற்கனவே காங்கிரசைச் சேர்ந்த இரு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். இவர்களையும் சேர்த்து ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 14 சட்டப் பேரவை உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். ஆளும் கூட்டணியில் இருந்தால் ஏராளமான சலுகைகள் கிடைக்கும் நிலையில், விலைமதிப்பற்ற சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து எதற்காக அவர்கள் விலகியுள்ளனர்? அதனால் அவர்களுக்கு பெருமளவில் பொருளாதாரம் மற்றும் அதிகார இழப்புகள் ஏற்படுமே? அவற்றையெல்லாம் சகித்துக் கொண்டா பதவி விலகியுள்ளனர்?

வேறு எதற்கு?

கர்நாடகத்தில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகத் தான் 14 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலகி உள்ளனர்.

என்ன... நம்ப முடியவில்லையா? அதெல்லாம்ம் கூடாது. நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். கர்நாடகத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காகத் தான் அவர்கள் பதவி விலகியிருக்கின்றனர். அப்புறம் இன்னொரு விஷயம்... இதைப்பற்றி பேசும் போது யாரும் சிரித்துவிடக்கூடாது.

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 225 இடங்களில் 113 இடங்களைக் கைப்பற்றும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். ஆனால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாரதிய ஜனதாவுக்கு மொத்தம் 105 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு79 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு 38 இடங்களும் கிடைத்தன. 2 இடங்களில் சுயேட்சைகளும், ஓரிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வென்றனர்.

பாரதிய ஜனதாவுக்கு போதிய ஆதரவு கிடைக்காத நிலையில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து ஆட்சியமைத்தன. சுயேட்சைகளும், பகுஜன்சமாஜமும் கூட ஆட்சியில் அங்கம் வகித்தன.

கர்நாடகத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றும் கூட ஆட்சியமைக்க முடியாததை பாரதிய ஜனதா கட்சி ஜனநாயகப் படுகொலையாகவே பார்த்தது. வேறு ஏதேனும் கட்சிகள் இருந்தால் கூட அவர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்கலாம். ஆனால், அப்படி எந்தக் கட்சியும் இல்லை. காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து யாரையாவது இழுத்தால் தான் ஆட்சியமைக்க முடியும். ஆனால், மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினராவது அணி மாறினால் தான் கட்சித்தாவல் தடை சட்டப்படி அவர்களின் பதவி தப்பிக்கும். ஆனால், அவ்வளவு பேர் அணி மாற மாட்டார்கள் என்பதால் பாரதிய ஜனதா புதிதாக சிந்தித்தது.

இன்னொருபுறம் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களுக்கு அமைச்சராக வேண்டும் என்று கனவு. ஆனால், அந்த கனவு நிறைவேறவில்லை. அதை அவர்கள் ஜனநாயகப் படுகொலையாகக் கருதினார்கள். தங்கள் கனவு நிறைவேற என்ன வழி என்று அவர்களும் புதிதாக சிந்திக்கத் தொடங்கினார்கள்.

இரு புதிய சிந்தனைகளும் இணைந்ததன் விளைவு தான் இந்த பதவி விலகல் நாடகம். 14 சட்டப் பேரவை உறுப்பினர்களும் பதவி விலகி விட்ட நிலையில், அவர்களின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் கர்நாடக சட்டப்பேரவையின் வலிமை 211 ஆக குறைந்து விடும். ஆட்சு அமைக்கத் தேவையான பெரும்பான்மை 106 ஆக குறைந்து விடும். இப்போது 105 உறுப்பினர்களைக் கொண்டுள்ள பாரதிய ஜனதா சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கும்.

இப்போது பதவி விலகிய 14 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாரதிய ஜனதாவில் இணைவார்கள். அவர்கள் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் அவர்கள் பாரதிய ஜனதா சார்பில் களமிறக்கப்படுவார்கள். வெற்றி பெற வைக்கப்படுவார்கள். பின்னர் அமைச்சர்களாகவோ, வாரியத் தலைவர்களாகவே நியமிக்கப்படுவார்கள். அப்போது இரு தரப்பினரின் கனவுகளும் நிறைவேறிவிடும். அப்போது கர்நாடகத்தில் ஜனநாயகம் மிகச்சிறப்பாக தழைத்தோங்கும். இப்ப சொல்லுங்க இது ஜனநாயகத்தை தழைக்க வைக்கும் செயல் தானே?

இந்த நாடகங்கள் அனைத்தையும் பின்னால் இருந்து இயக்கிய எடியூரப்பா எதுவுமே பேசாமல் இருக்கிறார். இந்த நிகழ்வுகளுக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறுகிறார். அவ்வளவு தன்னடக்கம் அவருக்கு.

இதுபோன்று ஜனநாயகத்தை தழைத்தோங்க வைக்கும் செயல்களைச் செய்வது எடியூரப்பாவுக்கு புதிதல்ல. ஏற்கனவே 2008&ஆம் ஆண்டில் கர்நாடக முதலமைச்சராக அவர் பதவியேற்ற போது, அவரது அரசுக்கு பெரும்பான்மை இல்லை. இப்போது செய்ததைப் போலவே காங்கிரசிலிருந்து சில சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து பதவி விலக வைத்து, வெற்றி பெறவைத்து அமைச்சராக்கிக் கொண்டார். அதேவழியில் தான் இப்போதும் ஜனநாயகத்தை தழைத்தோங்க வைத்திருக்கிறார் எடியூரப்பா.

வாழ்க ஜனநாயகம்...

வரலாறு படைக்கர்ட்டும் ஜனநாயகம்...

வெளிநாடுகளுக்கும் பரவட்டும் இந்த கலாச்சாரம்

ஜனநாயகம் தழைத்தோங்கட்டும்! என இவ்வாறு அதில் கணித்துள்ளார்.