ராம பக்தர்கள் அனுப்பும் உணவுப் பொருட்களால் நிரம்பி வழியும் சேமிப்பு கிடங்கு!
ராம பக்தர்கள் அனுப்பும் உணவுப் பொருட்களால் சேமிப்பு கிடங்கு நிரம்பி வழிந்து வருகிறது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஐந்து வயது பாலகனாக குழந்தை ராமர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பொதுமக்கள் தரிசனத்துக்காக நேற்று முதல் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, லட்சக்கணக்கிலான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மட்டும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குழந்தை ராமரை தரிசனம் செய்துள்ளனர்.
இதனிடையே, ராமர் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பரிசுப் பொருட்களையும், பிரசாதத்திற்கு தேவையான உணவு பொருட்களையும் அனுப்பி வைத்து வருகின்றனர். அந்த வகையில், ராம பக்தர்கள் அனுப்பும் உணவுப் பொருட்களால் கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் சேமிப்பு கிடங்கு நிரம்பி வழிந்து வருகிறது.
ராமர் மீதுள்ள அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் பல்வேறு உணவுப் பொருட்களை பிரசாதமாக அனுப்பி வருகின்றனர். இதனை சேமித்து வைக்க தற்போது இடமில்லை. இன்னும் பொருட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. கோயிலுக்கு வெளியே உணவுப் பொருட்களுடன் ஏராளமான லாரிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
இனி ராம் லல்லா இல்லை... அயோத்தி ராமருக்கு சூட்டப்பட்ட புதிய பெயர் 'பாலக் ராம்'!
அதேசமயம், உபரி பொருட்களை சேமித்து வைக்கவும், நிர்வகிப்பதற்கும் அறக்கட்டளை தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பக்தர்களின் மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ள அறக்கட்டளை அதிகாரிகள், உணவுப் பொருட்கள் மரியாதையுடன் கையாளப்படுவது உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். சேமிப்பு கிடங்கில் இடமில்லாமல் அறக்கட்டளை அதிகாரிகள் சவாலை எதிர்கொண்டாலும் பக்தர்களின் அசைக்க முடியாத பக்திக்கு இது ஒரு சான்றாகும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
“நாடு முழுவதும் இருந்து ராம பக்தர்கள் உணவுப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். காய்கறிகள், எண்ணெய், நெய், சர்க்கரை, மசாலா நிரப்பப்பட்ட நூற்றுக்கணக்கான லாரிகள் நாள்தோறும் வருகின்றன. குடோன் முழுவதுமாக நிரம்பியுள்ளது. மேலும் பொருட்களை சேமிக்க இடமில்லை. ஆனால், உணவுப் பொருட்களுடன் வெளியே ஏராளமான லாரிகள் காத்திருக்கின்றன.” என அறக்கட்டளை உறுப்பினர் ஒருவர் கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன் தினம் நடைபெற்றது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட ஐந்து வயதுடைய குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து, அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஐந்து வயது பாலகனாக அயோத்தி கோயிலில் ராமர் அருள் பாலிக்கிறார்.