சீனாவில் உருவாகி, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகளில் பேரிழப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் சமூக தொற்றாக மாறவில்லை. இந்தியாவில் 1000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 29 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சமூக பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரமே முடங்கியுள்ளது. 

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள், தொழில்துறையினர், மாத ஊதியதாரர்கள் என அனைத்து தரப்பினரையும் கருத்தில்கொண்டு அவர்களுக்கு உதவும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஆகிய இருவரும் நிதி சார்ந்த பல்வேறு சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டனர். 

கொரோனா ஊரடங்கை பொறுப்புடன் கடைபிடிக்க வேண்டும் என பல பிரபலங்கள் அறிவுறுத்திவரும் நிலையில், ராஜ்யசபா எம்பி ராஜீவ் சந்திரசேகரும், ஊரடங்கை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளதுடன், விரைவில் கொரோனாவை நம்மால் விரட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள ராஜீவ் சந்திரசேகர், கொரோனா ஊரடங்கில் ஒவ்வொரு நாளாக நாம் கடந்துவருகிறோம். வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு பரவியுள்ள கொரோனா, நமது நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. அதனால் உலக மக்கள் அனைவருமே பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கக்கூடும். பலர் வேலைவாய்ப்பை இழக்கக்கூடும். இதெல்லாம் நிதர்சனமான உண்மை. ஆனால் அவற்றையெல்லாம் சமாளித்து அதிலிருந்து மீண்டெழ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

 ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்களை கஷ்டத்திலிருந்து காக்கவும், அவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல சலுகைகளையும் அறிவிப்பையும் வெளியிட்டார். அதேபோல தொழில்துறையினர், வங்கிக்கடன் பெற்றோர், மாத ஊதியதாரர்கள் ஆகியோரின் நலனை கருத்தில்கொண்டு ஆர்பிஐ-யும் சில அறிவிப்புகளை வெளியிட்டது. இவ்வாறு அனைத்து தரப்பினரையும் கருத்தில்கொண்டு அனைவருக்குமான சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.

சில என்.ஜி.ஓக்களும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். எனவே அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவை மக்கள் பின்பற்ற வேண்டும்.  நம்மையும் நமது குடும்பத்தையும் நமது நாட்டையும் காப்பதற்காக வீட்டில் தனிமைப்படுங்கள். பொருளாதார ரீதியாகவும் மற்ற வகையிலும் இது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் இதை நாம் மன உறுதியுடன் செய்து காட்ட வேண்டும். அரசாங்கத்தின் உத்தரவுகளை பின்பற்றி, மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டால் கொரோனாவை நம்மால் விரட்டிவிட முடியும். ஜெய்ஹிந்த் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.