கோரக்பூர் மருத்துவமனையில் மூளை அழற்ச்சி நோயால் பலியான 71 குழந்தைகளின் குடும்பத்தினரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

குழந்தைகள் பலி

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் பி.ஆர்.டி. அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்குள்ள குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த குழந்தைகள் கடந்த வாரம் அடுத்தடுத்த நாட்களில் திடீரென இறந்தனர். 3 நாட்களில் 71 குழந்தைகள் பலியானார்கள்.

ஆக்சிஜன் சப்ளை இல்லை

அந்த குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு நிலுவை பணம் வழங்காததால், அவர்கள் சிலிண்டர் சப்ளைசெய்யவில்லை இதனால், குழந்ைதகள் இறந்தனர் எனக் கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்த மாநில அரசு, மூளை அழற்ச்சி நோயால்தான் குழந்தைகள் இறந்தனர் எனத் தெரிவித்தது.

இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடனடியாக முதல்வர்பதவியில் இருந்து, ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ராகுல் சந்திப்பு

இந்நிலையில், உயிரிழந்த 71 குழந்தைகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு சென்றார். அவருடன் மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் பிரமுகர்கள் உடன் சென்றனர். அப்போது குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினரைச் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

ஆதித்யநாத் ஒன்றும் செய்யவில்லை

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கோரக்பூரில் நிருபர்களிடம் கூறுகையில், “ கோரக்பூர் தொகுதியில் 5 முறை எம்.பி.யாக இருந்தும் கூட, இப்போது முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத் மருத்துவமனைக்காக ஒன்றும் செய்யவில்லை’’ எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கண்டனம்

முன்னதாக, முதல்வர் ஆதித்யநாத் ராகுல் காந்தி வருகையைக் கண்டித்து கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார். கோரக்பூரை சுற்றுத்தலமாக மாற்ற விடமாட்டேன் என்று கூறியிருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் கிரிஜா வியாஸ் கூறுகையில், “ ராகுல் காந்தி   குறித்துஅதுபோன்ற வார்த்தகைகளை, அறிக்கயை முதல்வர் ஆதித்யநாத்பயன்படுத்தக்கூடாது. ராகுல் வருகை என்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்த பயணம். இதில் நாடகம் ஒன்றும் இல்லை. இதுபோன்ற நேரங்களில் காங்கிரஸ் கட்சி எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக இருக்கும். ஆதித்யநாத் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தும் கவனமாக இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.