கொரோனா பாதிப்பு இந்தியாவில் தினமும் சீரான வேகத்தில் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் இருக்கிறது. கொரோனாவை தடுத்து விரட்ட மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. 

கொரோனாவால் பொதுச்சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் இருக்கும் சவால்களை திறம்பட எதிர்கொண்டு, சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய அரசு. 

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக, இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற தினம் மே 30. இன்றுடன் பிரதமர் மோடியின் 2.0 ஆட்சியில் ஓராண்டு முடிவடைகிறது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளை பட்டியலிட்டு பாராட்டியுள்ளார் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர். பிரதமர் மோடியின் 2.0 ஆட்சியின் ஓராண்டு கால ஆட்சி மற்றும் சாதனைகள் குறித்து ராஜீவ் சந்திரசேகர் கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கத்தை பார்ப்போம். 

சீனா உருவாக்கிய கொரோனா வைரஸால் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு, அந்த வைரஸுக்கு எதிராக போராடிவருகின்றன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு இடையே, பிரதமர்  நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைகிறது.

2019, மே 30ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக அபார வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருமனதாக பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக தேர்வு செய்தனர். சமீபத்தில் இப்படியொரு அபார வெற்றியை எந்த அரசியல் தலைவரும் பெற்றதில்லை.

2014-2019 ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் கடும் உழைப்பின் விளைவாக, அதை புரிந்துகொண்ட 61 கோடி மக்கள், பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தனர். பல்வேறு எதிர்க்கட்சிகளின் மோசமான விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளையும் மீறி, பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் அவரை பிரதமராக தேர்வு செய்தனர்.

கர்நாடகாவின் 28 மக்களவை தொகுதிகளில் 25 தொகுதிகளில் பாஜகவை வெற்றியடைய செய்தனர் கர்நாடக மக்கள். கர்நாடகாவை போல பல மாநிலங்களில், மக்கள் ஒருமனதாக, தீர்மானமாக பிரதமர் மோடிக்காக பாஜகவிற்கு வாக்களித்தனர். எதிர்க்கட்சிகளின் பிரிவினைவாத அரசியல் மற்றும் பிரச்சாரங்களுக்கு நாட்டு மக்கள் செவிமடுக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் சுயரூபங்களை அறிந்து அவர்களை புறக்கணித்தார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற இந்த ஓராண்டில், கடந்த பல்லாண்டுகளாக சாதிக்க முடியாதவற்றையெல்லாம் சாதித்தார். அரசியல் சாசன பிரிவு 370ஐ நீக்கியது, லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கியது, குடிமக்கள் சட்டத்திருத்தம், ஐபிசி சட்டத்திருத்தங்கள், பயங்கரவாதித்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள், வரலாற்று சிறப்புமிக்க அமெரிக்க அதிபருடனான உச்சி மாநாடு என, நேரத்தை வீணடிக்காமல் மக்களுக்காக ஓய்வின்றி உழைத்துவருகிறார் பிரதமர் மோடி. பொருளாதாரத்தை பொறுத்தமட்டில், அந்நிய நேரடி முதலீடு இந்த ஆண்டில் மட்டும் 50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இந்தியாவிற்கு வந்துள்ளது. கடந்த ஆண்டின் அந்நிய நேரடி முதலீட்டை விட இது அதிகம்.

பிரதமர் மோடியின் இரண்டாவது ஆட்சியின் இந்த ஓராண்டில், கொரோனா பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரும் சவாலாக கொரோனா திகழ்கிறது. யாருமே எதிர்பார்த்திராத, பேராபத்து கொரோனா. கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் அடைந்த வளர்ச்சியில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் கொரோனா பேரதிர்ச்சி.

கொரோனா விவகாரத்தை பிரதமர் மோடியின் சிறந்த தலைமையின் கீழ் மத்திய அரசு சிறப்பாக கையாண்டுவருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெற நாட்டு மக்களை ஒன்றாக திரட்டியுள்ளார் பிரதமர் மோடி. கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியையும் லாக்டவுனையும் நிதானமாகவும் தெளிவாகவும் கையாண்டுவருகிறார் பிரதமர் மோடி. மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை மாநில அரசுகளின் உதவியுடன் ஏற்படுத்தி, கொரோனவுக்கு எதிராக நாட்டையே ஒன்று திரட்டியுள்ளார் பிரதமர் மோடி.

லாக்டவுனை எதிர்கொள்ள பிரதமர் மோடியின் தனிப்பட்ட முயற்சி அபரிமிதமானது. அவரைத்தவிர வேறு யாராக இருந்தாலும் சோர்வடைந்திருப்பார்கள். ஆனால் லாக்டவுனில் நாட்டு மக்களை, கொரோனாவுக்கு எதிரான போரில் ஓரணியாக ஒன்று திரட்டியது பிரதமர் மோடியின் சாதனை. மருத்துவ நிபுணர்கள், தொழிலதிபர்கள், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், உலக தலைவர்கள் என அனைவருடனும் ஆலோசிக்கும் முதல்வர், ஊடகங்கள் வாயிலாக மக்களிடமும் உரையாற்றுகிறார். நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும் முன்னின்று எதிர்கொள்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் 2014-2019 ஆட்சியில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளும், செயல்படுத்தப்பட்ட திட்டங்களும், கொரோனா நெருக்கடியை சமாளிக்க உதவுகின்றன. குறிப்பாக இந்த நெருக்கடியான சூழலில் ஏழை, எளிய மக்களை காப்பதற்கு, பிரதமர் மோடியின் முந்தைய ஆட்சியின் திட்டங்கள் உதவுகின்றன. ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டன. அந்த ஜன் தன் வங்கிக்கணக்கில் தான் பெண்கள், விவசாயிகள், ஊனமுற்றோர், கணவனை இழந்த பெண்கள், முதியோர் ஆகியோருக்கான நிவாரண தொகை வழங்கப்படுகிறது. 

அதேபோல பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா, பொது விநியோக திட்டம், பிரதம மந்திரி கிசான் ஆகிய திட்டங்கள், கிராமப்புற, ஏழை மக்கள், விவசாயிகள் ஆகியோருக்கான நிவாரண தொகையை எந்தவித சிக்கலும் இல்லாமல் முழுமையாக கொண்டு சேர்க்க உதவுகின்றன.

டிஜிட்டல் இந்தியா திட்டம், கோடிக்கணக்கான மக்களை இணைப்பதற்கும், தொழில்களை நடத்துவதற்கும் பயன்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர்கள் வழங்குவது, பிரதம மந்திரி ஆயுஷ்மான் திட்டம், ஜன் ஔஷாதி ஆகிய திட்டங்கள் சாமானிய மக்களுக்கான திட்டங்கள். கொரோனா நெருக்கடிக்கு இடையில், புலம்பெயர் தொழிலாளர்கள், ரயில்கள் மூலமாக ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். வந்தே பாரத் என்ற திட்டத்தில், கொரோனா பொதுமுடக்கத்திற்கு மத்தியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

நிதித்துறை மற்றும் வங்கிகளின் அமைப்பை கடந்த ஐந்தாண்டில் பிரதமர் மோடி சீர்திருத்தியதன் விளைவாக, இன்று வங்கி கட்டமைப்பு வலுவாக உள்ளது. அதனால் தான் கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலிலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களால், வங்கிகளின் உதவியுடன் நிமிர்ந்து நிற்க முடிகிறது.

பிரதமர் மோடியின் கடந்த கால திட்டங்களால் தான் இந்தியாவால் கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது. மத்திய அரசின் சிறப்பாக நடவடிக்கைகளால்தான், வளர்ந்த வல்லரசு நாடுகளை விட, இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. 

பிரதமர் மோடியின் 2 செயல்பாடுகள் தான், கொரோனாவை இந்தியா சிறப்பாக எதிர்கொள்ள காரணம். 1) கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பளித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுப்பது. பிரதமர் மற்றும் மாநில முதல்வர்களின் நல்லுறவால் தான், கொரோனாவை எதிர்த்து இந்தியாவால் சிறப்பாக செயல்பட முடிகிறது.

2) மக்களின் ஒத்துழைப்பு - அரசு சட்ட திட்டங்களை வகுத்து அதன்படி மக்களை செயல்பட வைக்காமல், மக்களின் நடத்தையிலும் செயல்பாடுகளிலும் அணுகுமுறைகளிலுமே மாற்றங்களை கொண்டுவந்தது. 

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பிரதமர் மோடி மாதிரியான மக்களின் நம்பிக்கைக்குரிய ஒரு தலைவரால் மட்டுமே இதெல்லாம் சாத்தியப்படுத்த முடியும். மத்திய அரசுக்கு, பொருளாதாரம், தொழில்துறை, வேலைவாய்ப்பு ஆகிய பல சவால்கள் இன்னும் இருக்கின்றன. இந்த சவால்களை எல்லாம் பொறுப்புடன் எதிர்கொள்ள பிரதமரும் மத்திய அரசும் தயாராகவே இருக்கிறது.

இந்திய பொருளாதார மீட்டுருவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு நிதி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்புக்கும் பிரதமர் மோடி நம்பிக்கையளித்துள்ளார்.

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், இந்த சூழலை பயன்படுத்தி இந்தியாவை நிலைகுலைய செய்ய நினைத்த பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சிகளையும் இந்தியா முறியடித்துள்ளது.  பொருளாதார மற்றும் பொதுச்சுகாதார நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி அரசு திடமாக எடுத்துவருகிறது. 

கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், இன்னும் கொஞ்ச காலத்திற்கு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்படியொரு சூழலில் இந்தியாவிற்கு வலுவான தலைவர் தேவை. இந்தியா அந்த வலுவான தலைமையை பெற்றிருக்கிறது. பிரதமர் மோடி இந்தியாவின் வலுவான தலைவர். கடந்த காலங்களில் இருந்த வலுவற்ற, முடிவுகளை எடுக்க முடியாத தலைவர்கள் இருந்துள்ளனர். இப்போது கூட சில மாநிலங்களில் அப்படியான வலுவில்லாத தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்போதைய இந்தியா, பிரதமர் மோடியை பெற்றிருப்பதால், எப்படியான சவால்களையும் எதிர்கொண்டு மீண்டுவரும்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், அதை எதிர்கொள்ளும் அதேவேளையில், அதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், சுயசார்பு பாரதம் என்ற திட்டத்தின் மூலம், எதிர்கால இந்திய பொருளாதாரத்தின் மீதும் பிரதமர் மோடி தொலைநோக்கு பார்வையுடன் கவனம் செலுத்துகிறார். உலகளவில் எதிர்காலத்தில் இந்தியாவில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, வளமான இந்தியாவை உருவாக்குவதில் மோடி கவனம் செலுத்தியுள்ளார். கொரோனாவிற்கு பிறகு, உலக பொருளாதாரத்தில் இந்தியா முன்னிலை வகிக்கும். 

பிரதமர் மோடியின் 2.0 ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்த நான்கு ஆண்டுகளும் பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் மக்கள் ஆதரவளித்து இந்தியாவை அடுத்தகட்டத்திற்கு நகர்த்த உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ராஜீவ் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.