கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. ஏழை, எளிய மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், மாத ஊதியதாரர்கள், சிறு, குறு தொழில்கள், பெரிய தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் கடும் பாதிப்படைந்தனர். 

ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார சரிவை ஈடுகட்டி, உள்நாட்டு உற்பத்திக்கும் உள்நாட்டு வணிகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்வதுடன், இந்தியாவை தன்னிறைவு பொருளாதார நாடாக உருவாக்கும் விதமாக, சுயசார்பு இந்தியா என்ற திட்டத்திற்கு ரூ.20 லட்சம் கோடியை ஒதுக்கியது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. 

அந்தவகையில், ரூ.20 லட்சம் கோடிக்கான அறிவிப்புகளை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயம், புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டோர், நிதி நிறுவனங்கள், ஏழை, எளிய மக்கள், சுய உதவிக்குழுக்கள், பழங்குடி மக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறக்கூடிய வகையில், அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டது. 

இந்நிலையில், பெண் தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய நிதியமைச்சரிடம் ராஜீவ் சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழான அறிவிப்புகள் வெளியாகும் முன்பே, ஏற்கனவே மே 2ம் தேதி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் சாமானிய மக்களின் கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சருக்கும் பிரதமருக்கும் தனது கடிதத்தின் வாயிலாக தெரியப்படுத்தியிருந்தார் ராஜீவ் சந்திரசேகர். 

இதையடுத்து, கடந்த 14ம் தேதி நாடு முழுவதும் உள்ள 150 பெண் தொழில் முனைவோர்களிடம் ஆன்லைனில் உரையாடி, அவர்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் கேட்டறிந்த ராஜீவ் சந்திரசேகர், மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் அறிவிப்புகள் குறித்து அவர்களுக்கு விளக்கிக்கூறினார். 

அத்துடன் நில்லாமல், பெண் தொழில் முனைவோர்களின் கோரிக்கைகளை பட்டியலிட்டு, அவற்றை நிறைவேற்ற ஆவண செய்யுமாறு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள்:

* பெண் தொழில் முனைவோர்களுக்கென பிரத்யேக திட்டங்கள் மற்றும் நிதியுதவிகள் தேவை. 

* ஈ.எஸ்.ஐ., பிஎஃப்., செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

* பெண் தொழில் முனைவோர்களின் நலன் மீது அக்கறை செலுத்துமாறும் கோரிக்கைகளுக்கு செவிமடுக்குமாறும் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். 

* வங்கிக்கடன் தவணை செலுத்தும் அவகாசத்தை 6-9 மாதங்களாக அதிகரிக்க வேண்டும். இந்த அவகாச காலக்கட்டத்திற்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட வேண்டும். 

* பெண் தொழில் முனைவோரின் சிறு, குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்க வேண்டும். ஏற்கனவே ஊரடங்கால் தொழில் முடங்கியிருக்கும் நிலையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, பெண் தொழில் முனைவோர் மீதான சுமையை அதிகரிக்கும். 

* கிராமப்புற பெண் தொழில் முனைவோரின் நலன் மீது பிரத்யேக கவனம் செலுத்தி, அவர்களுக்காக சில அரசு திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும். கிராமப்புற பெண் தொழில் முனைவோருக்கான தனி அமைப்பை ஏற்படுத்தி, உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும். 

 

பெண் தொழில் முனைவோர்களின் மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என ராஜீவ் சந்திரசேகர், பிரதமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஸ்மிரிதி இராணி ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.