Asianet News TamilAsianet News Tamil

தப்பு பண்ணிட்டீங்க.. இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்..! அத்துமீறிய சீனாவுக்கு ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை

சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த நிலையில், சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார்.
 

rajeev chandrasekhar believes india will retaliate china in economically and militarily
Author
Bengaluru, First Published Jun 16, 2020, 4:46 PM IST

இந்தியா - சீனா எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ உயரதிகாரி ஒருவர் மற்றும் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

இந்தியா - சீனா இடையே 2005ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இருநாட்டு ராணுவ வீரர்களில், எந்த தரப்பு அத்துமீறினாலும், எதிர்தரப்பு தாக்குதல் நடத்தாமல் எச்சரித்து திருப்பியனுப்ப வேண்டுமே தவிர தாக்குதல் நடத்தக்கூடாது. இதைப்பயன்படுத்தி, அவ்வப்போது சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. மே மாதத் தொடக்கத்தில் இந்த ஏரியின் அருகே இந்திய - சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது. அக்சாய் சீனாவின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தது.

rajeev chandrasekhar believes india will retaliate china in economically and militarily

அதன் விளைவாக இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்ததையடுத்து, ஜூன் 6-ஆம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்ததைத் தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கு, பேட்ரோலிங் பாய்ண்ட் 15, உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டு ராணுவத்தினரை 2 முதல் 2.5 கிமீ தூரம் வரை தங்கள் நாட்டு எல்லைக்குள் சீன ராணுவம் அழைத்துக் கொண்டது என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 5 வாரங்களாக இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் பதற்றமான சூழலே இருந்துவந்த நிலையில், திங்கட்கிழமை(15ம் தேதி) இரவு சீன ராணுவத்தினர், அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் அத்துமீறிய செயல், இந்தியாவின் கோபத்தை தூண்டியுள்ளது. சீனாவின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் தகுந்த நேரம் பார்த்து பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

rajeev chandrasekhar believes india will retaliate china in economically and militarily

இந்நிலையில், சீன ராணுவத்தின் அத்துமீறிய செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராஜ்ய சபா பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர், சீனாவிற்கு பொருளாதார ரீதியாகவும் ராணுவத்தின் மூலமாகவும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது டுவிட்டரி பதிவிட்டுள்ள ராஜீவ் சந்திரசேகர், சீனா வரலாற்றில் மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டதாக எச்சரித்துள்ளார். 3 இந்திய ராணுவ வீரர்களை கொன்றதன் மூலம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ எதிரியாகிவிட்டீர்கள். உங்களுக்கு(சீனாவிற்கு) பொருளாதார ரீதியாகவும் ராணுவத்தின் மூலமாகவும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ராஜீவ் சந்திரசேகர் எச்சரித்துள்ளார். 

 

சீன ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து போர் பதற்றத்தை தணிக்க, இருநாட்டு ராணுவ மூத்த அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios