Rajdhani Shatabdi Trains To Be Revamped This is What They Will Have
சுகாதாரமான கேட்டரிங் சேவை, பணியாளர்களுக்கு சீருடை, சுத்தமான கழிப்பறை என பல வசதிகளுடன் ராஜ்தானி, சதாப்தி சொகுசு ரெயில்களை சீரமைத்து ஜொலிக்க வைக்க ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு அக்டோபர் முதல் புதுப்பொலிவுடன், சதாப்தி, ராஜ்தானி ரெயில்கள் ஜொலிக்கப் போகின்றன.
பயணிகள் புகார்
அதிக டிக்கெட் கட்டணம் கொடுத்து பயணம் செய்யும் இந்த இரு வகையான ரெயில்களில் பயணிக்கும் பயணிகள், ரெயிலின் சாப்பாடு, நேரத்துக்கு வராமல் தாமதமாக வருவது, சுத்தமில்லாத கழிப்பறை என பல்வேறு குறைகளை ரெயில்வே அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
ரூ.25 கோடி
இதையடுத்து, இந்த இரு ரெயில்களில் வசதியை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.25 கோடி மதிப்பில் 15 ராஜ்தானி ரெயில்கள், 15 சதாப்தி ரெயில்களிலும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

ஸ்வர்ண திட்டம்
அக்டோபர் மாதம் முதல் பண்டிகைக் காலம் தொடங்குவதால், அதற்குள்ளாக சீரமைப்பு பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ‘ஸ்வர்ண திட்டம்’ என்ற பெயரில் 3 மாதத்தில் செய்யப்பட உள்ள சீரமைப்பில் பெட்டிகளை அழகுபடுத்துதல், கழிப்பறைகளை சுத்தமாக பராமரித்தல், இருக்கை, படுக்கைகளை சொகுசாக்குதல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும், ரெயில் பயணிகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை காட்ட, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட உள்ளது.
ராஜ்தானி, சதாப்தி
மும்பை, ஹவுரா, பாட்னா, ராஞ்சி, புவனேஷ்வர் உள்ளிட்ட 15 வழித்தடங்களில் செல்லும் ராஜ்தானி ரெயில்கள், ஹவுரா-பூரி, புதுடெல்லி-சண்டிகர், புதுடெல்லி-கான்பூர், ஹவுரா-ராஞ்சி, ஆனந்த்விகார்- காத்கோடம் உள்ளிட்ட 15 வழித்தடத்தில் செல்லும் சதாப்தி ரெயிலும் சீரமைக்கப்பட உள்ளன.

நவீன வசதிகள்
மேலும், ரெயில் குறித்த நேரத்துக்கு புறப்பட்டு செல்லவும், வந்து சேரவும் நேரத்தை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சமையல் அறையில் சுகாதாரமான சாப்பாடுகளை பயணிகளுக்கு வழங்குதல், டிராலி மூலம் சாப்பாடு எடுத்துச் சென்று பரிமாறுதல், பணியாளர்களுக்கு புதிய சீருடை, பயணிகளுக்கு தேவைப்பட்டால் சினிமா, சீரியல், இசை ஆகியவற்றை கட்டணத்துடன் அளித்தல் போன்றசேவைகளும் செய்யப்பட உள்ளன.
