ராஜஸ்தான் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு!
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் 7 எம்.பி.க்கள் களமிறக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா தலைமையில், கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் இந்த வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜஸ்தான் மாநில பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 41 பேர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உள்ளிட்ட 7 எம்.பி.க்களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. ஆனால், பாஜக மேலிடத்தின் இந்த முடிவு அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. பல்வேறு தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ள எம்.பி.க்கள் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றனர்.
ஜோத்வாரா தொகுதியில் வாய்ப்பளிக்கப்படாத மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜ்பால் சிங்கிற்கு ஆதரவாக ஜெய்ப்பூரில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அந்த தொகுதியில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ராஜ்பால் சிங்கின் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த ஊர்வலத்திற்கு முன்பே, ராஜ்யவர்தன் சிங் ரத்தோரின் நியமனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 9ஆம் தேதி இரவு, பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட உடனேயே, ராஜ்பால் சிங், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வீட்டிற்குச் சென்று, ராஜ்யவர்தன் சிங்கிற்கு எதிராக முழக்கம் எழுப்பினார். மறுநாள், ராஜ்பாலின் ஆதரவாளர்கள் ஜெய்பூரில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், வித்யாதர்நகரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் பைரோ சிங் ஷெகாவத்தின் மகன் நர்பத் சிங் ராஜ்வி வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவருக்குப் பதிலாக ஜெய்ப்பூர் முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த தியா குமாரி எம்.பி., அந்த தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்
மேலும், சஞ்சூர் தொகுதியில் எம்.பி., தேவ்ஜி படேலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதற்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ ஜீவரம் சவுத்ரி மற்றும் தனராம் சவுத்ரி ஆகியோர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் சி.பி.ஜோஷி கூறுகையில், “கட்சியின் பாராளுமன்ற வாரியம், சீட் ஒதுக்கீட்டை தீர்மானிக்கும் உச்ச அமைப்பாகும். அது என்ன முடிவு செய்ததோ அது விரைவில் வெளிப்படுத்தப்படும்.”
கடந்த காலங்களில் பாஜக தலைமை கட்சிக்குள் இவ்வளவு எதிர்ப்பை சந்தித்தது இல்லை. வரலாற்று ரீதியாக வசுந்தரா ராஜே சிந்தியா வகித்து வந்த முதல்வர் பதவிக்கான போட்டியாளரை, பாரம்பரியத்தை முறித்து, கட்சி அறிவிக்கவில்லை என்பதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது.