ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அம்மாநில பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை இன்று முதல் அமல்படுத்தவுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்துக்கு நடப்பாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது, முதல்வர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை அறிவித்தார். அதன்படி, சிரஞ்சீவி காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ள 1.35 கோடி குடும்பங்களின் பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு இணைய இணைப்புடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரூ.12,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஏலம் நடைபெற்றது. நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த திட்டத்துக்கான ஏலத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், உயர்மட்டக் குழு மதிப்பீட்டிற்குப் பிறகு ஏலதாரர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நடப்பாண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்தை செயல்படுத்த ஆளும் காங்கிரஸ் அரசு முனைப்பு காட்டி வந்தது. இந்த நிலையில், முதல்வர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் ராஜஸ்தான் மாநில பெண்கள் 1.3 கோடி பேருக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு இலவச இணைய வசதியுடன் கூடிய இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
சிறுநீர் பைக்கு பதிலாக ஸ்ப்ரைட் பாட்டில்: அரசு மருத்துவமனையின் அவலம்!
முதற்கட்டமாக தலா ரூ.6,800 மதிப்புள்ள 40 லட்சம் ஸ்மார்ட்போன்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படவுள்ளன. தலைநகர் ஜெய்பூரில் மட்டும் 1.9 லட்சம் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படவுள்ளன.
ஆரம்பத்தில், ரியல்மி மற்றும் ரெட்மி ஆகிய இரண்டு நிறுவனங்களின் மொபைல் போன்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளதாகவும், பின்னர், சாம்சங், நோக்கியா போன்ற நிறுவனங்களின் போன்களும் வழங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. “செல்போன்களுக்கு ரூ.6,125 மற்றும் இலவச இணையத்திற்கு ரூ.675 வழங்கப்படும். இணையக் கட்டணங்களுக்காக மாநில அரசு ஆண்டுக்கு ரூ.900 செலுத்தும்.” எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் இலவச செல்போன்களை பெற பயனாளிகள் தங்கள் ஜன் ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் பதிவு அட்டை ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். கைம்பெண்கள் தங்கள் பிபிஇ கார்டைக் காட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
