பீகார் மாநில அரசு மருத்துவமனையில் சிறுநீர் பைக்கு பதிலாக ஸ்ப்ரைட் பாட்டில் பயன்படுத்தப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் பீகார் மாநில அரசு மருத்துவமனை ஊழியர்கள் நோயாளி ஒருவருக்கு சிறுநீர் பைக்கு பதிலாக ஸ்ப்ரைட் பாட்டிலைப் பயன்படுத்தியுள்ளனர்.

பீகார் மாநில அரசு மருத்துவமனையான சதார் மருத்துவமனைக்கு கடந்த திங்கள் கிழமை நோயாளி ஒருவர் சுயநினைவின்றி அழைத்து வரப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நோயாளிக்கு சிறுநீர் பையை வழங்குமாறும், சுயநினைவு வர ஆக்சிஜன் குழாய் பொருத்து அதனுடன் இன்சுலின் ஊசி போடுமாறும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால், அந்த நோயாளிக்கு சிறுநீர் பைக்கு பதிலாக ஸ்ப்ரைட் பாட்டிலை மருத்துவமனை ஊழியர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், மருத்துவமனை மேலாளர் ரமேஷ் பாண்டேவை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் பலனில்லை.

இறுதியில், செவ்வாய்க்கிழமை காலை, நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறுநீர் பை உள்ளிட்ட தேவையான பொருட்கள் நோயாளிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: 4 மணிக்கு பேசும் பிரதமர் மோடி!

இதுகுறித்து ரமேஷ் பாண்டே கூறுகையில், மருத்துவமனையில் சிறுநீர் பைகள் தட்டுப்பாடு இருப்பது தனக்குத் தெரியாது என்றும், தகவல் கிடைத்தவுடன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், “அந்த பொறுப்பில் இருந்தவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. எனவே, மருந்து தட்டுப்பாடு குறித்து எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. தகவலறிந்ததும் தேவையான பொருட்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.” என்றும் ரமேஷ் பாண்டே கூறியுள்ளார்.

அதேசமயம், இதுகுறித்து ரமேஷ் பாண்டேவிடம் விளக்கம் கேட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது.