அசோக் கெலாட் - சச்சின் பைலட் சமரசம்: ராஜஸ்தான் காங்கிரஸில் அதிரடி மாற்றம்!
ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து தேர்தலை சுமூகமாக சந்தித்து மீண்டும் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே சமரசம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இருவருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக, மாநில அளவில் மிகப்பெரிய மாற்றத்தை செய்து புதிய நிர்வாகிகளை ராஜஸ்தான் காங்கிரஸ் நியமித்துள்ளது. அதன்படி, 21 துணைத் தலைவர்கள், 48 மாநில பொதுச் செயலாளர்கள், 121 செயலாளர்கள், 25 புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் இதர நிர்வாகிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நியமனங்களில் அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பைலட் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்பட்ட இடம் மிகக் குறைவாக இருப்பதால், கெலாட்டின் ஆதரவாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், ராகேஷ் பரீக், முகேஷ் பாகர், ராஜேந்திர சவுத்ரி, சுரேஷ் மிஸ்ரா, பிரசாந்த் சர்மா மற்றும் இந்திரஜ் குர்ஜார் போன்ற சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்க விஷயம்.
பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு?
ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் கட்சியின் அமைப்புப் பிரிவில் செய்யப்பட்டுள்ள இந்த மறுசீரமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கெலாட் மற்றும் பைலட் கோஷ்டிகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சினை காரணமாக பல மாதங்களாக தாமதமாகி வந்த இந்த நியமனங்கள், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக செய்யப்பட்டுள்ளன.
புதிய நியமனங்களின்படி, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக சட்டமன்றத் தேர்தல் வரை கோவிந்த் சிங் தோடஸ்ராவே நீடிப்பார் என தெரிகிறது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை சச்சின் பைலட் ஏற்பார் என்ற ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பு சச்சின் பைலட்டுக்கு வழங்கப்படலாம் என்ற சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் விவகாரங்கள் குறித்து அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வேணுகோபால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தவா, மாநில தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா, சச்சின் பைலட், ராஜஸ்தானை சேர்ந்த மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் காலில் காயம் அடைந்த காரணத்தால் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வீடியோ கன்ஃபரன்சிங் மூலம் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார், அந்த கூட்டத்துக்கு பிறகு, சச்சின் பைலட்டின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.