பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு விலக்கு?
பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு மத்திய அரசு விலக்களிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மத்திய பாஜக அரசின் முக்கிய கொள்கைகளில் ஒன்று பொது சிவில் சட்டம். பொது சிவில் சட்டம் என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் வகையிலான ஒரே மாதிரியான சட்டம். மத அடிப்படையிலான தனிப்பட்ட சட்டங்கள், பரம்பரை விதிகள், தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை ஆகியவற்றை மாற்றியமைத்து, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான விரிவான சட்டங்களின் தொகுப்பை பொது சிவில் சட்டம் குறிக்கிறது. அரசியலமைப்பின் 44ஆவது பிரிவு இதற்கு வழிவகை செய்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பொது சிவில் சட்டத்தை தயாரிப்பதற்கான குழுவை அமைக்கும் தனிநபர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த காலங்களில், இதேபோன்ற மசோதாக்கள் அறிமுகம் செய்யட்டாலும், அவை மாநிலங்களவையை சென்றடையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பொது சிவில் சட்டம் தொடர்பான வரைவு மசோதாவை விரைவில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களைப் பெறும் புதிய நடைமுறையை சட்ட ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.
நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு மத்திய அரசு விலக்களிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின சமூகங்களின் அழுத்தம் காரணமாக, பொது சிவில சட்ட வரம்பிலிருந்து பழங்குடியினக் குழுக்களுக்கு விலக்க அளிக்க வாய்ப்புள்ளாதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
தக்காளிக்கு பவுன்சர்கள் பாதுகாப்பு: காய்கறி வியாபாரி கைது!
அரசியலமைப்பின் கீழ் பாதுகாக்கப்பட்ட பழங்குடி சமூகங்களின் பழக்கவழக்கங்கள், கலாசாரம், மரபுகள் ஆகியவை, மத்திய அரசால் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தால் பாதிக்கப்படாது என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 12 பேர் கொண்ட நாகா குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு, கிறிஸ்தவ சமூகம் மற்றும் சில பழங்குடியினரை சட்டத்தில் இருந்து விலக்குவது குறித்து சட்ட ஆணையம் பரிசீலித்து வருவதாக அமித் ஷா உறுதியளித்ததாக தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, பொது சிவில் சட்டத்தில் இருந்து பழங்குடியினருக்கு மத்திய அரசு விலக்களிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஒரே குடும்பத்துக்கு இரண்டு வெவ்வேறு விதமான சட்டத்திட்டங்கள் எப்படிப் பொருந்தும். அதேபோல் ஒரு தேசம் இரண்டு விதமான சட்டங்களைக் கொண்டு இயங்க முடியாது என பொது சிவில் சட்டத்தை வலியுறித்தி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.