கடந்த மே மாதம் இறுதியில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. இரண்டு மாதங்களாக மழை வெளுத்து வாங்கிய நிலையில், கேரள மாநிலம் பெரும் பாதிப்புப்புக்குள்ளாகியுள்ளது.

 

ஏறத்தாழ 100 ஆண்டுகளில் பெய்யாத மழை இப்போது பெய்து சுமார் 20 ஆயிரம்  கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டு உள்ளது. இதுவரை கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 2¼ லட்சத்துக்கும் மேலான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் இந்த கனமழையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் முகமது சபிருல்லா மேற்பார்வையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மீட்புப்பணிகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த ஜி ராஜமாணிக்கம் , வயநாடு சப்-கலெக்டர் என்எஸ்கே உமேஷ் ஆகிய இருவரும் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ராஜ மாணிக்கத்தின் நிவாரணப் பணிகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியயுள்ளது.

 

கடந்த வாரத்தில் ஒரு நாள், வயநாடு பகுதியில் மீட்புப்பணிகளை முடித்துவிட்டு நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ராஜமாணிக்கமும், உமேஷும் வந்துள்ளனர். அந்தநேரத்தில், மக்களுக்கு வழங்குவதற்காக அரிசி, கோதுமை, பருப்பு, பால் பொருட்கள் போன்றவற்றை  ஏற்றிய ஜீப் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளது.

நள்ளிரவு நேரம் என்பதால், நிவாரணப் பொருட்களை இறக்கி வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் யாரும் இல்லை. இதையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய தமிழக ஐஏஎஸ் அதிகாரி  ராஜமாணிக்கம் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளை தானே தோளில் சுமந்து சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறக்கி வைத்துவிட்டு அந்த ஜீப்பை அனுப்பினார்.

 

இதே போன்று வயநாடு பகுதியில் சேறும் சகதியும் நிறைந்த ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாட்டிக் கொண்டனர். அவர்களை அங்கிருந்து மீட்க நினைத்த ராஜமாணிக்கம் ஐஏஎஸ், உடனடியாக அங்குள்ள குளத்தில் இறங்கி செடி, கொடிகளை அகற்றினார். சேற்றை அங்கிருந்த அப்புறப்படுத்தி பொது மக்கள் அங்கிருந்து வெளியேற வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.

 

இதையடுத்து அங்கு சிக்கியுருந்த மக்கள் கொஞ்சம், கொஞ்சமாக வெளியேறினர். கலெக்டரின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

 

ராஜ மாணிக்கம் ஐஏஎஸ் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏழை விவசாயின் மகள். ராஜ மாணிக்கத்தின் மனைவியும் கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக  பணியாற்றி வருகிறார். அவரும் வெள்ள நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

இவர்கள் இருவரும் சேர்ந்து திருவாதவூர் கிராமத்தில்   ஏழை மாணவர்களுக்காக இலவச கோச்சிங் சென்டர் ஒன்று நடத்தி வருகின்றனர்.