குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையின் பார்வையாளர் மாடத்தில் மழை நீர் கசிவது சுற்றுலாப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

2018ம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது சர்தார் வல்லபாய் படேல் சிலை. 182 அடி உயரத்தில் கட்டப்பட்ட இந்த சிலை, உலகின் மிகப்பெரிய சிலையா என்பதுபோன்ற பல கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியது.

அத்தோடு 3000 கோடி ரூபாய் செலவில் இவ்வளவு பெரிய சிலையை உருவாக்கியத்ற்கான காரணம் குறித்தும் அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர். அவற்றையும் மீறி, இந்த சிலையை திறப்பது, வல்லபாய் படேலிற்கு கொடுக்கும் அங்கீகாரம் எனவும் இதன்மூலம் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வருவாயை பெருக்கலாம் எனவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.

 

அவர் கூறியது போலவே, படேல் சிலையை காண ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மிகப்பிரம்மாண்டமான Statue of Unity- ல் மழைநீர் கசிவது போன்ற வீடியோ சமூகவலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிலையில் 153வது அடியில் இருக்கும் பார்வையாளர்கள் மாடத்தில் மழை நீர் கசிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும், குறைவான மழைக்கே இந்த நிலை என்றால் கனமழையோ, புயலோ ஏற்பட்டால் சிலையின் நிலை என்ன என நெட்டிசன்கள் மீம்ஸுகளை தெறிக்கவிடுகின்றனர்.