மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அமைச்சர் ஆவீர்களா என்ற கேள்விக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பதில் அளித்துள்ளார். 
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்திருந்தார். அப்போது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது, ‘காங்கிரஸ் அரசு அமைந்தால், நீங்கள் அமைச்சர் ஆவீர்கள் என்று தகவல்கள் உலா வருகிறதே...’ என்று கேள்வி எழுப்பியபோது, “அதைப் பற்றி பேச நாள் இருக்கிறது. எனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறேன். என்னுடைய பணியைப் பற்றி பொதுவெளியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. என்னுடைய முதல் பணி  கல்வி கற்பிப்பதுதான். அந்தப் பணியை விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.
அரசியலில் சேருவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ரகுராம் ராஜன், “என்னுடைய மனைவி என்னிடம் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறிவிட்டார். அரசியலில் இணைந்தால், நான் உங்களுடன் வாழ மாட்டேன்” என்று சொல்லிவிட்டார் என்று கிண்டலாகத் தெரிவித்தார்.

 
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் ‘நியாய்’ திட்டம் பற்றி அக்கட்சி அறிவிப்பதற்கு முன்பு பல்வேறு பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இத்திட்டம் பற்றி ரகுராம் ராஜனுடனுடன் ஆலோசனை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. 
மத்தியில் ஒரு வேளை காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ரகுராம் ராஜன் நிதியமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுபற்றி ரகுராம் ராஜன் பதில் அளித்திருக்கிறார்.