ஆரம்பிக்கலாமா... இறங்கி அடிக்க தயாரான ராகுல் காந்தி - விக்ரம் பட பாடலுடன் போட்ட சூசக பதிவு வைரல்
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பின்னணியில் விக்ரம் பட பாடலை ஒலிக்கவிட்டுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயர் இருப்பது எப்படி என பேசி இருந்தார். இதையடுத்து மோடியை இழிவுபடுத்தும் விதமாக ராகுல் காந்தி பேசியுள்ளதாக கூறி அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பு வந்தது. அதன்படி ராகுல் குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது.
ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை அடுத்து, அவரது எம்.பி பதவியும் பறிக்கப்பட்டதோடு அவரை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... ஒரு பத்திரிக்கையாளராக இருந்து பாஜக ஆதரவு கேள்விகளை இங்கே கேட்காதீர்கள்! - ராகுல்காந்தி காட்டம்!
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, நான் யாரைப்பார்த்தும் பயப்பட மாட்டேன் என்றும் தன்னை தகுதிநீக்கம் செய்தாலும் சரி, ஜெயிலில் தூக்கி போட்டாலும் சரி தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டுதான் இருப்பேன். அதை மட்டும் நிறுத்தவே மாட்டேன் என தடாலடியாக பேசி இருந்தார். அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.
அந்த பதிவின் பின்னணியில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் டைட்டில் டிராக் பாடலையும் பதிவிட்டுள்ளார். ஆரம்பிக்கலாமா என தொடங்கும் அந்த பாடலை படத்தில் கமல் எதிரிகளை துவம்சம் செய்ய தயாராகும் சமயத்தில் பயன்படுத்தி இருப்பர். அதேபோல் தன்னை இந்த நிலைக்கு தள்ளியவர்களை களையெடுக்க தயாராகிவிட்டதாக இந்த பாடலின் மூலம் ராகுல் காந்தி சூசகமாக தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்த பதிவு தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ராகுல் காந்திக்கு ஆதரவாக காங். சத்தியாகிரகத்துக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு