நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் பெகாசஸ் ஆகியவற்றை மாநிலங்களின் குரல்வளையை நெறிக்கும் கருவிகளாக மத்திய அரசு பயன்படுத்துவதாக கடுமையாக குற்றம்சாட்டினார் ராகுல் காந்தி. 

நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரை மீதான விவாதத்தில், வயநாடு தொகுதி எம்பியும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி பேசியது பெரும் பரபரப்பாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை மிகக்கடுமையாக விமர்சித்தார் ராகுல் காந்தி.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின், ஆட்சிமுறையும், செயல்பாடுகளும், இந்தியா மாநிலங்களின் ஒன்றியமா அல்லது மன்னராட்சி நாடா என்ற சந்தேகத்தை எழுப்புவதாக கடுமையாக குற்றம்சாட்டியதுடன், இந்தியாவை ஏழைகளுக்கு ஒரு நாடாகவும் பணக்காரர்களுக்கு ஒரு நாடாகவும் உருவாக்கி வைத்திருப்பதாகவும் கடுமையாக சாடினார்.

ராகுல் காந்தியின் உரையில் மிக முக்கியமான அம்சம் என்றால், அது மத்திய அரசின் கூட்டாட்சி தத்துவ முறைக்கு எதிரான செயல்பாட்டை அவர் விமர்சித்ததுதான்.

அதுதொடர்பாக பேசிய ராகுல் காந்தி, நீதித்துறை, தேர்தல் ஆணையம், பெகாசஸ் ஆகியவை மாநிலங்களின் குரலை ஒடுக்கும் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார் ராகுல் காந்தி.

"

நீதித்துறை இந்திய ஜனநாயகத்தின் மூன்றாவது தூண்; தேர்தல் ஆணையம் தன்னிச்சை அதிகாரம் பெற்ற அமைப்பு ஆகும். இவற்றின் செயல்பாடுகளின் மீதான மக்களின் நம்பிக்கை தான் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அப்படியிருக்கையில், இவையனைத்தையும் மாநிலங்களின் குரலை ஒடுக்க மத்திய அரசு கருவிகளாக பயன்படுத்துகிறது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்துடன் பெகாசஸை ராகுல் காந்தி சேர்த்ததுதான் அவரை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியது.