சீன தூதரை சந்தித்து பேசியதாக வந்த தகவலை மறுத்துவந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பின்னர் ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது சீன தூதருடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான சீன தூதர் லூ சவோஹூய்யை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாயின.

இது தொடர்பாக, சீன தூதரக இணையதளத்தில், கடந்த 8-ம் தேதி இந்த சந்திப்பு நடந்ததாக செய்தி பதிவிடப்பட்டிருந்தது. இதனை பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ஆனால், இந்த தகவலை ராகுல் காந்தி தொடக்கத்தில் மறுத்து வந்தார். பின்னர், சீனா மற்றும் பூடான் நாட்டு தூதர்களை ராகுல்காந்தி சந்தித்ததை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா செய்தியாளர்களிடம் ஒப்புக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்ட ராகுல், எதிர்கட்சியின் துணைத்தலைவர் என்ற வகையில், நாட்டின் தற்போதைய சூழல் குறித்து அறிந்து கொள்வது தனது கடமை என்றும், அதன் காரணமாகவே இரு நாட்டு தூதர்களை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், ராகுல் சீன தூதருடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்கா வதோரா தனது குடும்பத்தினருடன் இணைந்து, சீன தூதருடன் எடுத்துக்கொண்டுள்ள குழுப்புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது.