21ஆம் நூற்றாண்டின் அடிமைத்தனம்: தெலங்கானா கிக் தொழிலாளர்களுக்கு ராகுல் அளித்த உறுதி!

தெலங்கானாவில் ஆட்டோ டிரைவர்கள், கிக் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவர்களின் நலனுக்காக சட்டமியற்றப்படும் என உறுதியளித்தார்

Rahul Gandhi interacts with auto drivers gig workers in telangana smp

மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. மூத்த அரசியல் கட்சித் தலைவர்கள் தெலங்கானாவில் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், தெலங்கானாவில் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்துக்கு இடையே, ஆட்டோ டிரைவர்கள், கிக் தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அவர்களின் நலனுக்காக சட்டமியற்றப்படும் என உறுதியளித்தார்.

கிக் தொழிலாளர்கள் என்பவர்கள் குறுகிய கால ஒப்பந்தக்காரர்கள் ஆவார்கள். விரும்பிய பணியை, விரும்பிய நேரத்தில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி சுயமாக செய்து கொள்ளும் முறை கிக் என்று அழைக்கப்படுகிறது. அதாவது, ஆன்லைன் டெலிவரி செய்வது, ஒலா, உபெர் ஆட்டோ, பைக் ஓட்டுவது, ஆன்லைன் உணவு டெலிவரி செய்வது போன்ற பணிகள்.

உலகெங்கிலும் இந்த கிக் எகானமி, கிக் வேலை முறை பெரிய அளவில் பரவ ஆரம்பித்து இருக்கிறது. நிறுவனங்களின் முதலாளிகள் இந்த முறைக்கு பெரிதும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், கிக் தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்பு பெரிதும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள், கிக் தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, அவர்களின் நலனுக்காக சட்டமியற்றப்படும் என உறுதியளித்தார்.

அவர்களுடன் கலந்துரையாடியபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அத்துடன், அவற்றை நிவர்த்தி செய்ய காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு போன்று சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். “ராஜஸ்தானில் நாங்கள் கிக் தொழிலாளர்களின் வகையை உருவாக்கியுள்ளோம். ஒரு ஆர்டர் வரும்போதெல்லாம், அதில் கிடைக்கும் பணத்தில் சில,  உங்கள் சமூகப் பாதுகாப்பான காப்பீடு, ஓய்வூதியம் போன்றவற்றுக்கு நிறுவனத்தின் சார்பாக செல்கிறது.” என்றார்.

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், முதல்வர் மற்றும் அமைச்சரவையுடன் பேசி, அவர்களது பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனவும் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார். தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால், அங்குள்ள கிக் தொழிலாளர்களின் நலனுக்கான சட்டம் கொண்டு வரப்படும் என்றும் ராகுல் காந்தி அவர்களுக்கு உறுதியளித்தார்.

தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுனர்களின் பிரச்னைகளை கேட்டறிந்த அவர், தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அவர்களுக்கு ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்

அதேபோல், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களும், பணி பாதுகாப்பு மற்றும் இதர சலுகைகள் இல்லாததால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை ராகுல் காந்தியிடம் விளக்கினர். இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அவர்களுடன் முதல்வர் கூட்டம் நடத்தி, அவர்களின் நலனுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று ராகுல் உறுதியளித்தார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி, கிக் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து முடிவெடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், கிக் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க அவர்களுக்கு நல வாரியம் அமைக்கவும் ராகுல் காந்தி பரிந்துரைத்தார்.

ஆறு வயது பட்டியலின சிறுவன் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

கிக் தொழிலாளர்கள் தாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ராகுல் காந்திக்கு விளக்கினர். பெட்ரோல் விலை உயர்வால் செலவினம் அதிகரித்து வருவதாகவும், ஆர்டருக்கான வருமானம் குறைந்து வருவதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர். டெலிவரி கட்டணம் மிகக் குறைவு என்றும், வாகனங்கள் அல்லது பெட்ரோலுக்கான செலவுகளை நிறுவனங்கள் தருவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். விபத்துக்களில் காப்பீடு இல்லாதது குறித்தும் அவர்கல் ராகுலிடம் புகார் தெரிவித்தனர்.

 

 

அவர்களின் பிரச்சினைகளை கனிவுடன் கேட்ட ராகுல் காந்தி, “உங்கள் நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் நீங்கள் சிக்கிக்கொண்டீர்கள் என்பதை நீங்கள் என்னிடம் சொன்னதிலிருந்து நான் புரிந்துகொண்டேன். இது 21ஆம் நூற்றாண்டின் அடிமைத்தனம்.” என குறிப்பிட்டார்.

 

 

அதன்பின்னர், அவர்களுடன் ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களை முன்னால் உட்கார வைத்து ராகுல் பின்னால் உட்கார்ந்திருந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios