பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்து, பல்வேறு வழக்குகளை தன்மீது வாரிக் குவித்துக் கொண்ட திவ்யா ஸ்பந்தனா எனப்படும் குத்து ரம்யா, ராகுல் காந்தியே தனக்கு ஆதரவு கரம் நீட்டாததால், சமூக ஊடக பிரிவு தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். 

தமிழர்களுக்கு குத்து ரம்யா என்று அறியப்பட்ட திவ்யா ஸ்பந்தனா, திரைப்படங்களில் நடிப்பதை விட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில், கடந்த 2013ஆம் ஆண்டு, கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி. ஆன அவர், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இருப்பினும், அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, திவ்யா ஸ்பந்தனாவுக்கு, தற்போதைய தலைமுறையின் முக்கிய பொறுப்பான சமூக ஊடகப் பிரிவு தலைவர் பதவியை வழங்கியது.

 

சமூக ஊடகங்களில் எப்போது ஆக்டிவாக செயல்படும் திவ்யா ஸ்பந்தனா, அவ்வபோது பாஜக அரசின் தவறான செயல்பாடுகளுக்கு பதிலடி கொடுப்பதில் தயங்குவதில்லை. இந்த நிலையில், அண்மையில், பிரதமர் மோடியை அவதூறாக விமர்சிக்கும் படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றினார். அதாவது பிரதமர் மோடி தன் உருவத்தில் இருக்கும் சிலைக்கு தானே திருடன் என பெயர் சூட்டுவது போன்ற படம் அது. இதனால், கொதித்துப் போன பாஜகவினர் அளித்த புகாரின் பேரில், திவ்யா ஸ்பந்தனா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தேசத்துரோக வழக்கு மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு இடங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

பிரதமர் மோடியை திருடன் என திவ்யா ஸ்பந்தனா விமர்சித்த விவகாரம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்திக்கே பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனால், அது குறித்து அறியாத திவ்யா ஸ்பந்தனா, தேசத்துரோக வழக்கிற்கு பிறகும், பிரதமர் மோடியை திருடன் என மீண்டும் விமர்சித்தார். இதனால், மேலும் பல வழக்குகளை சந்தித்த திவ்யா ஸ்பந்தனாவை அம்போவென விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி, சமூக ஊடகப்பிரிவின் முக்கிய பணிகளை வேறு ஒருவருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. 

வேறு ஒருவர் என்றால், அவர் வேறு யாருமல்ல? காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மார்கரெட் ஆல்வாவின் மகனான நிகில் ஆல்வா தான். இதனால், சற்று அதிர்ச்சியடைந்த திவ்யா ஸ்பந்தனா, ராகுல் காந்தியை சந்திக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் ராகுல் காந்தி சந்திக்க மறுத்துவிட்டார். இதனால் காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவு தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. 

பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில், திவ்யா ஸ்பந்தனாவுக்கு கைகொடுக்காத ராகுல் காந்தி, தற்போது ராஜினாமாவுக்கு பிறகும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், நொந்துபோன திவ்யா ஸ்பந்தனா, அண்மையில் நடந்த தேசியத் தலைவர்களின் சந்திப்பு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அவர் வேறு கட்சிக்கு மாறும் எண்ணம் கொண்டுள்ளாரா என அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.