Asianet News TamilAsianet News Tamil

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாளை மேற்குவங்கத்தில் நுழையும் ராகுல் யாத்திரை!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை நாளை மேற்குவங்க மாநிலத்திள் நுழையவுள்ளது

Rahul bharat jodo nyay Yatra will enter West Bengal tomorrow amid political buzz smp
Author
First Published Jan 24, 2024, 7:37 PM IST

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது.

ராகுல் காந்தியின் யாத்திரையானது நாகாலாந்தை கடந்து தற்போது பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையானது நாளை மேற்குவங்க மாநிலம் கூச் பெஹருக்குள் நுழையவுள்ளது.

முன்னதாக, ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அசாம் மாநில ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தி சென்ற பேருந்து பாஜக தொண்டர்களால் வழிமறித்து தாக்கப்பட்டதாகவும், அப்போது ஜெய் ஸ்ரீராம், மோடி... மோடி... முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

மார்ச் மாதம் வரை அயோத்தி ராமர் கோயிலுக்குப் போகாதீர்கள்: அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

அதேபோல், அசாம் மாநிலத்தின் சமூக சீர்திருத்தவாதியான புனித ஸ்ரீமந்த சங்கர்தேவாவின் பிறந்த இடமான படத்ரவா தானுக்குச் செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அசாம் மாநிலம் கவுகாத்திக்குள் நுழைய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடுப்புகளை மீறி ராகுலின் யாத்திரை சென்றது.

இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், இந்தியர்களை கண்மூடித்தனமாக கீழ்ப்படிய பாஜக, ஆர்.எஸ்.எஸ். முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். அசாம் மாநிலத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு அம்மாநில ஆளும் பாஜக அரசு தொடர் இடையூறுகள் ஏற்படுத்து வருவது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், “ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்ரா அசாமில் நுழைந்த நாள் முதல், அம்மாநில காவல்துறை, அரசு நிர்வாகம், முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் வேண்டுமென்றே யாத்திரையில் தடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர். ராகுல் காந்தியையும், அவரது வாகன பேரணியை மிரட்டுவதற்காக அரசு ஆதரவுடன் வன்முறையில் ஈடுபடுவது மாநில அரசுக்கு பொருத்தமற்றது.” என தெரிவித்தார்.

குடியரசு தின அணிவகுப்பு 2024: மகளிர் சக்தியை காட்சிப்படுத்தும் டிஆர்டிஓ!

ராகுல் காந்தியின் நியாய யாத்திரை மேற்குவங்க மாநிலத்துக்குள் நுழையவுள்ளதற்கிடையே, எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், “ராகுல் காந்தியின் யாத்திரை மேற்குவங்கம் வழியாக செல்கிறது. ஆனால் அது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. மரியாதைக்காகவாவது ‘நான் வருகிறேன் சகோதரி' என ராகுல் காந்தி கூறியிருக்க வேண்டும்.” என மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். அதேபோல், ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மணிப்பூரில் தொடங்கியுள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை, சுமார் 6,200 கிமீ பயணித்து அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios