‘பாரதிய ஜனதாவை நசுக்க ஒன்றுபடுங்கள்’
மக்களுக்கு ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் அழைப்பு

உ.பி.யில் கூட்டாக பிரசாரம் தொடங்கிய ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும், ‘‘பா.ஜனதா கட்சியின் பிளவுபடுத்தும் அரசியலை நசுக்க ஒன்றுபடும்படி, மக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பட்டு உள்ளது.

பா.ஜனதாவை நசுக்க

கூட்டணி அமைந்தபின், காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி முதன் முறையாக நேற்று உத்தரப் பிரதேசம் வந்தார். தலைநகர் லக்னோவில் அவர்கள் இருவரும் கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர்.

தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த இரு கட்சியினரும் இணைந்து செயல்படு வேண்டும் என்ற உறுதியான தகவலை, இந்த பேட்டியின் மூலம் இரு தலைவர்களும் தொண்டர்களுக்கு உணர்த்தினார்கள். பிளவுபடுத்தும் அரசியல் நடத்தும் பா.ஜனதாவை நசுக்க உ.பி. மக்கள் முன்வர வேண்டும் என்றும், அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

ராமர் கோவில்

அயோத்தி ராமர் கோவில் பிரச்சினை குறித்து கேட்டதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, ‘‘ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த பிரச்சனையை பா.ஜனதா எழுப்பி வருகிறது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை’‘ என்றார்.

காங்கிரஸ் கோட்டையாக திகழும் அமேதி, ரேபரேலி தொகுதி உடன்பாடு பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த ராகுல், ‘‘அது எளிதில் தீர்வு காணக்கூடிய சாதாரணமான பிரச்சினை’‘ என்றார். ‘‘இது வரலாற்று சிறப்பு மிக்க கூட்டணி... பாசிச சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக, அனைத்து தலைவர்களும் ஒன்றாக செயல்பட்டு வருவதாகவும்’‘ அவர் தெரிவித்தார்.

பிரதமர் வேட்பாளரா?

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு, ‘‘நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அது பற்றி பார்த்துக்கொள்ளலாம்’’ என ராகுல் பதில் அளித்தார்.

பேட்டியின்போது பெரும்பாலான கேள்விகளுக்கு ராகுல் காந்தியே பதில் அளித்தார். ஒரு கேள்விக்குப் பதில் அளித்த அவர், ‘‘தனிப்பட்ட முறையில் நான் மாயாவதியையும் கன்ஷிராமையும் மதிக்கிறேன். மாயாவதி கட்சியின் அரசு தவறுகள் செய்து இருந்தாலும், அவர் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு.

கூட்டணியில் மாயாவதி?

பா.ஜனதாவுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. பா.ஜனதாவின் கொள்கைகள் நாட்டுக்கு கேடு விளைவிப்பவை. மாயாவதியின் கொள்கை அப்படிப்பட்டது இல்லை’‘ என்றார்.

கூட்டணியில் மாயாவதி கட்சியும் இடம் பெறும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டதற்கு, பதில் அளித்த அகிலேஷ் யாதவ், ‘‘அவருடைய கட்சி சின்னம் யானை. அதற்கு இடம் அளிக்க வேண்டியது என்றால் அதிக இடம் தேவைப்படும்’‘ என சாமர்த்தியமாக பதில் அளித்தார். ‘‘இது மக்கள் கூட்டணி. அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம்.‘ ைசக்கிளு’க்கும் ‘கை’க்கும் நல்ல பொருத்தம் உள்ளது’’ என்றும் அவர் கூறினார்.

இதயபூர்வ கூட்டணி

பேட்டியின்போது ராகுல் மேலும் கூறுகையில், ‘‘இது சந்தர்ப்பவாத கூட்டணி இல்லை. இதயபூர்வமான கூட்டணி. நாங்கள் ஒன்றாக வெற்றிவாகை சூடுவோம்.

நாட்டில் உள்ள இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்று என்ற செய்தியை இந்த கூட்டணி பிரதமர் மோடிக்கு உணர்த்தி உள்ளது. இந்த நாட்டை பிளவுபடுத்த மோடியை அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.

கூட்டாக பிரசாரம்

பேட்டிக்குப்பின்னர் இரு தலைவர்களும் லக்னோ நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, ‘‘கூட்டணியை உ.பி. மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது’’ என்ற கோஷத்துடன் கூட்டாக பிரசாரம் மேற்கொண்டனர்.

பிரியங்கா, டிம்பிள் பிரசாரமா?

தேர்தலில் பிரியங்கா பிரசாரம் செய்வாரா? என்பதற்குப் பதில் அளித்த ராகுல், ‘‘பிரியங்கா எனக்கு பெரும் துணையாக இருக்கிறார். தேர்தலில் பிரசாரம் செய்வாரா, மாட்டாரா? என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.

டிம்பிள் யாதவ் (அகிலேஷின் மனைவி) பிரசாரம் குறித்து பதில் அளித்த அகிலேஷ், ‘‘ டிம்பிள் ஒரு எம்.பி. என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வார்’’ என்றார்.

உ.பி. தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவும் கூட்டாக பிரசாரம் மேற்கொள்வார்களா? என்று கேட்டதற்கு, நேரடியான பதிலை தவிர்த்த ராகுல், ‘‘எங்கள் கொள்கைகளை ஆதரிக்கும் அனைவரும் எங்களுடன் வரவேண்டும் என விரும்புகிறோம்’’ என்று மட்டும் தெரிவித்தார்.

கூட்டணிக்கு காரணமான ‘3 பி’

கூட்டணி பற்றி விளக்கம் அளித்த ராகுல், வளர்ச்சி (பிராக்ரஸ்), வளம் (பிராஸ்பரிட்டி), அமைதி (பீஸ்) ஆகிய ‘3 பி’க்களே கூட்டணிக்கு காரணம் என்றார்.

அருகில் இருந்த அகிலேஷ், அடுத்த ‘பி’யாக ‘மக்களை’ யும் (பீப்பில்ஸ்) சேர்த்துக்கொண்டார்.

 ‘சைக்கிளின் இரு சக்கரங்கள்’ - அகிலேஷ்

‘‘சைக்கிளின் (சமாஜ்வாதி கட்சியின் சின்னம்) இரு சக்கரங்கள் போன்றவர்கள் ராகுலும் நானும். எங்களுக்கு இடையே வயது வேறுபாடும் அதிகம் இல்லை. இன்று ஒரு தொடக்கம்தான்’’ என, பேட்டியின்போது அகிலேஷ் யாதவ் கூறினார்.

ராகுல் காந்தி கூறும்போது, ‘‘கங்கா-யமுனா சங்கமம் போன்ற இந்தக் கூட்டணி காரணமாக சரஸ்வதி என்ற வளர்ச்சி ஏற்படும்..எங்களுக்குள் ஒற்றுமையும் உண்டு; எதிர்ப்புகளும் உண்டு. ஒற்றுமையின் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து இருக்கிறோம்’’ என்றார்.