ஆம் ஆத்மி ராஜ்யசபா தலைவராக ராகவ் சத்தா நியமனம்!
ஆம் ஆத்மி மாநிலங்களவை தலைவராக ராகவ் சத்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் தற்போது 10 உறுப்பினர்கள் உள்ளனர். அக்கட்சியின் மாநிலங்களவை தலைவராக சஞ்சய் சிங் இருந்தார். டெல்லியில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள கலால் கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய பணமோசடி விசாரணை தொடர்பாக அமலாக்கத்துறையால் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், சஞ்சய் சிங்கிற்கு பதிலாக ஆம் ஆத்மி மாநிலங்களவை தலைவராக ராகவ் சத்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாநிலங்களவைத் தலைவருக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைமை எழுதியுள்ள கடிதத்தில், உடல்நல குறைவு காரணமாக சஞ்சய் சிங்கால் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாததால் அவருக்கு பதிலாக ராகவ் சத்தா மாநிலங்களவை தலைவராக இருப்பார் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, விதி மீறல் மற்றும் தவறான நடத்தைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் ராகவ் சத்தா அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் (திருத்தம்) மசோதா, 2023க்கு எதிராக ராகவ் சத்தா கொண்டு வந்த தீர்மானத்தில் தங்களது கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதாக அதிமுக மாநிலங்களவை எம்.பி., தம்பிதுரை உள்பட 4 எம்.பி.க்கள் தங்களின் சிறப்புரிமைகளை மீறியதாக புகார் அளித்தத்கையடுத்து, அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும், அவரது சஸ்பெண்ட் காலம் போதுமானது என சிறப்புரிமைக் குழு கூறியதையடுத்து அவர் மீண்டும் மாநிலங்களவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும்!
டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.