வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தவர்களுக்கு சிக்கல்!
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர், அதிக அளவிலான தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்த 13 லட்சம் பேருக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் விளக்கம் கேட்டுள்ளது.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அறிவித்தார்.
பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு முடிவடைந்து விட்டது. தற்போது வங்கிகள் மூலம் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை கணக்கிட்டு, அதில் கணக்கில் வராத தொகைகளை செலுத்தியவர்களின் விவரங்களை சேகரிப்பதற்காக ஆபரேஷன் கிளீன் மணி என்ற திட்டத்தை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் கணக்கில் காட்டப்படாத 4 லட்சத்து 70 ஆயிரம் கோடி பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆய்வில் தயாரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் 18 லட்சம் பேருடைய வருமானம், அவர்கள் செலுத்திய தொகைக்கு முரண்பட்டதாக உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.
இதில் 13 லட்சம் பேருக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் வருவாய்க்கான ஆதாரம் பற்றி விளக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கான விளக்கத்தை வருமான வரித்துறையின் இணையதளத்தில் மூலம் கூற வேண்டும். விளக்கம் தர தவறினால் 10 நாட்களில் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
