உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து மிகத் தீவிரம் அடைந்துள்ள நிலையில் குவாட் அமைப்பு உச்சி மாநாடு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மோரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

2-வது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர். இந்த நிலையில் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார்ட் மாரிசன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், குவாட் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான பாதையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். பிரதமர் மோடி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்தும் அதன் முக்கிய நோக்கத்தில் குவாட் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சாசனத்தைக் கடைபிடிப்பது, பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார் என்று பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
