ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இந்தியா வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு, மற்றும் உக்ரைன் போர் நிலவரம் குறித்து விவாதிக்க உள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக டிசம்பர் 4ஆம் தேதி முதல் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளார் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின்போது, ரஷ்ய அதிபர் புடின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும், இந்தியக் குடியரசுத் தலைவரும் புடினை வரவேற்று, விருந்து அளிக்கவுள்ளார்.

புடினின் இந்தப் பயணம், இந்தியா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும், உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையை அமைக்கவும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வருடாந்திர உச்சிமாநாடு இரு நாடுகளுக்கும் இடையே மாறி மாறி நடைபெறுகிறது. இதற்கு முன்னர் புடின் கடைசியாக டிசம்பர் 2021-ல் இந்தியா வந்திருந்தார். அதன் பிறகு, பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூலையில் மாஸ்கோவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் பங்கேற்றார்.

S-400 மற்றும் சுகோய்-57

பிரதமர் மோடியும் அதிபர் புடினும் டிசம்பர் 5ஆம் தேதி சந்திக்கும்போது, முக்கியமாகப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள S-400 ட்ரையூம்ப் (S-400 Triumf) வான் பாதுகாப்புப் படைப் பிரிவுகளுக்கு மேலும் ஐந்து கூடுதல் படைப் பிரிவுகளையும், போதுமான அளவு வான் பாதுகாப்பு ஏவுகணைகளையும் கொள்முதல் செய்வது குறித்த விவாதிக்கப்படும்.

அமெரிக்காவின் F-35 லைட்னிங் II ஜெட் விமானங்களுக்கு மாற்றாக ரஷ்யாவின் ஐந்தாவது தலைமுறை சுகோய்-57 (Sukhoi-57) போர் விமானங்களை வாங்குவது குறித்து இந்தியா இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. மாஸ்கோ இதைத் தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இந்த உச்சிமாநாட்டின்போது இது தொடர்பான பெரிய அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு இல்லை எனப் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போர்

பாதுகாப்பு கொள்முதல் தவிர, ரஷ்யா-உக்ரைன் போர் குறித்தும் விவாதிக்கப்படும். பிரதமர் மோடி பலமுறை அமைதிக்கு வலியுறுத்திப் பேசியுள்ளார். சமீபத்தில், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிகாவுடன் தொலைபேசியில் உரையாடி, மோதல் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்துப் பேசியிருந்தார்.

"உக்ரைன் போர் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அவர் அளித்த விளக்கத்தைப் பாராட்டுகிறேன். இந்த மோதலுக்கு விரைவில் முடிவுகட்டவும், நீடித்த அமைதியை நிலைநாட்டவும் இந்தியா தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியது" என்று ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால, பன்முக உறவுகளை மறுபரிசீலனை செய்யவும், அடுத்த கட்டத்திற்கான திட்டங்களை வகுக்கவும் ஒரு முக்கியமான தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.