பூரி ஜெகநாதர் கோவில் பூசாரி..! சுத்த சைவம்
பாடி பில்டிங் என்றாலே புரோட்டீன் பவுடர், சிக்கனை கிலோ கணக்கில் உண்ண வேண்டும் என்ற பொதுமனநிலை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வெறும் காய்கறிகளை மட்டுமே சாப்பிட்டு பாடி பில்டிங்கில் சாதித்த பூரி ஜெகநாதர் கோவிலின் அர்ச்சகரை பற்றி பார்ப்போம்.
பாடி பில்டிங் செய்ய விரும்புபவர்கள் ஜிம்மில் சேர்ந்தால், அதுவும் அதைப்பற்றிய அடிப்படை அறிவு, பொறுமை இல்லாதவர்கள் சேர்ந்தால், அவர்களிடம் புரோட்டீன் பவுடர்களை திணிப்பது வழக்கமாக ஆயிற்று. ஆனால் அதற்கு காரணம், பொதுப்புத்தியும், பொறுமையின்மையுமே முக்கியமான காரணம்.
ஆம்.. புரோட்டீன் பவுடர் சாப்பிட வேண்டும், சிக்கன் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்படுவதுண்டு. ஆனால் அசைவத்தையே தொடாமல் வெறும் சைவ உணவை சாப்பிட்டே பாடி பில்டிங்கில் சாதிக்க முடியும் என்பதற்கு ஒடிசாவை சேர்ந்த அனில் கோச்சிக்கர் தான் சிறந்த எடுத்துக்காட்டு.
தனது கல்லூரிக்காலம் முடிந்த பின்னர் பாடி பில்டிங்கில் ஆர்வம் கொண்ட அனில், அதற்காக ஜிம்மில் சேர்ந்து ஒர்க் அவுட் செய்து பாடி பில்டிங்கில் சாதித்தும் காட்டியவர். ஆனால் இயற்கையாக, காய்கறிகள், சைவ உணவுகளை சாப்பிட்டே பாடி பில்டாக வேண்டும் என்றால் அதற்கு சற்று கூடுதல் காலம் எடுக்கும். அதுவரை பொறுமையுடன் காத்திருந்து நீண்டகால பயிற்சியாக உடற்பயிற்சியை செய்தாலே பாடி பில்டிங்கில் சாதிக்க முடியும் என்பதற்கு இவர் உதாரணம். பூரி ஜெகநாதர் கோவிலின் பாகுபலி என்று அழைக்கப்படும் அனில், பாடி பில்டிங்கில் பல சாதனைகளை புரிந்தவர்.
முதல்முறையாக 2012ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தின் பாடி பில்டிங் சாம்பியன் பட்டத்தை வென்ற அனில், 2014ல் உலக பாடி பில்டிங் மற்றும் உடற்கட்டு போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றார். 2016ல் மிஸ்டர் இண்டர்நேஷனல் இந்தியன் பட்டம் வென்ற அனில், 2018 மற்றும் 2019ல் இந்தியாவின் நேஷனல் சாம்பியன்.
பாடி பில்டிங்கில் சாதித்த அனில் கோச்சிக்கர், ஒடிசாவின் பிரபலமான பூரி ஜெகநாதர் கோவிலில் கைங்கரியம் செய்துவரும் இவர், ஜிம் வைத்து பல இளைஞர்களை பாடி பில்டிங்கிற்கு தயார் செய்துவருவதுடன், ஹோட்டலும் வைத்திருக்கிறார்.
பூரி ஜெகநாதர் கோவிலின் பூசாரியா இது? என்று வியக்குமளவிற்கு தனது உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும் இவர், முதலில் பாடி பில்டர்; அடுத்துதான் அர்ச்சகர்.