தற்போது தொடங்கியுள்ள குடியரசுத் தேர்தலில் வாக்களிக்க புதுச்சேரி சட்டசபைக்கு காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எம்எல்ஏக்கள் வருகை தந்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் இன்று  நடைபெறுவதை யொட்டி புதுவை எம்.எல். ஏ.க்கள் வாக்களிப்பதற்கு வசதியாக புதுவை சட்டசபையில் கமிட்டி அறையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதோடு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நேற்று  மாலை முதல் இன்று மாலை  வரை பொதுமக்கள் சட்டசபை வளாகங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 2 எம்.பி.க்களுக்கும், 30 எம்.எல்.ஏ.க்களுக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு உரிமை உள்ளது. இதில், 2 எம்.பி.க்களும் டெல்லியில் ஓட்டு போடுகிறார்கள்.

எம்.எல்.ஏ.க்கள் மட்டும் புதுவையில் ஓட்டு போட உள்ளனர். 30 எம்.எல். ஏ.க்களில் 18 பேர் காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு ஆதரவாக உள்ளனர்.

என். ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஓட்டளிக்க உள்ளனர். புதுவை எம்.எல். ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 16 ஆகும்.

இதன்படி மீராகுமாருக்கு 288 ஓட்டுகளும், ராம்நாத் கோவிந்துக்கு 192 ஓட்டுகளும் கிடைக்கும். ஆனால், 2 எம்.பி.க்களின் ஓட்டு ராம்நாத் கோவிந்துக்கு கிடைக்க உள்ளது.

ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். 2 எம்..பி.க்களுக்கும் சேர்த்து 1416 ஓட்டுகள் ராம்நாத் கோவிந்துக்கு செல்லும். எனவே, புதுவையில் மீரா குமாரை விட ராம்நாத் கோவிந்துக்கே அதிக ஓட்டுகள் கிடைக்கும் என தெரிகிறது.