ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்குதேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சென்ற பேருந்தின் மீது விவசாயிகள் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரபிரதேசத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலைநகர் அமராவதியை மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக அங்கு கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டு அந்த இடமே சூடுகாடாக காட்சியளிப்பதாக தமக்கு தகவல் வந்ததாகவும், அதனால் அமராவதி பகுதியை பார்வையிட செல்வதாகவும் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். 

இதனையடுத்து, இன்று காலை தனது கட்சி எம்எல்ஏக்களுடன் பேருந்தில் அமராவதிக்கு சென்றுக்கொண்டிருந்தார். வெங்கடபள்ளம் பகுதியில் பேருந்து சென்ற போது, விவசாயிகள் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் சேர்ந்து பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்கள் பேருந்துக்கு வழிவிடாமல் கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

மேலும், அமராவதியில் தலைநகரை அமைக்க நிலம் கொடுத்த அந்த விவசாயிகள், அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை தங்களை ஏமாற்றிவிட்டதாக கொந்தளித்தனர். பின்னர் போலீசாரின் பாதுகாப்புடன் பேருந்து அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களில் ஒருவர் பேருந்து சென்றவுடன் அதனை நோக்கி காலணி ஒன்றை தூக்கி வீசியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.