மத்திய அரசின் ஆலோசனையின் படி ரூபாய் நோட்டு தடையைக் கொண்டு வந்து, ரிசர்வ் வங்கியின் சுயாட்சியை இழக்கவைத்த கவர்னர்உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி மும்பை, நாக்பூர், பெங்களூரு, ஆமதாபாத் ஆகிய நகரங்களில்உள்ள ரிசர்வ் வங்கி முன் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

மஹாராஷ்டிரா காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான அசோக் சவான் மும்பையில் நடக்கும் போராட்டத்துக்கு தலைமை ஏற்கிறார். நாக்பூரில் நடக்கும் போராட்டத்துக்கு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் ராதாகிருஷ்ண விகே படேல் தலைமை ஏற்கிறார்.

பெங்களூருல் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மஹாராஷ்டிரா முதல்வர்கள் பிரிதிவிராஜ் சவானும், ஆமதாபாத் நகரில் நடக்கும் போராட்டத்துக்கு சுசில்குமார் ஷின்டேவும் தலைமை ஏற்கின்றனர்.

இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுசில்குமார் ஷிண்டே கூறுகையில், “ ரூபாய் நோட்டு தடை தொடர்பாக வரும் 29-ந்தேதி மும்பை முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். 

நரேந்திர மோடி ஆட்சியின் ரிசர்வ் வங்கி தனது சுயாட்சியை இழந்துவிட்டது. ரூபாய் நோட்டு தடை என்பது தனிநபர் ஒருவர் எடுக்கப்பட்ட முடிவு. அதனால்,தான் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலக கோருகிறோம்.

இன்றைய சூழலில் பொதுமக்கள், தங்களின் சேமிப்பைக் கூட வங்கிகள், ஏ.டி.எம்.களில் இருந்து எடுக்க முடியவில்லை. இந்த ரூபாய் நோட்டு தடையால், மக்கள் கடுமையான சூழலை எதிர்கொண்டுள்ளனர்'' எனத் தெரிவித்தார்.