சந்தேஷ்காலியில் 144 அமல்.. இணைய சேவை முடக்கம் - திரிணாமுல் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக திரண்ட மக்கள்! ஏன்?
Protest Against TMC Leader : ஷேக் ஷாஜஹான் 'இந்து பெண்களை' பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக, தேசிய மகளிர் ஆணையம் (NCW) இதனை கவனத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியது.
தலைமறைவான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது உதவியாளர்களை கைது செய்யக் கோரி உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு, மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி பகுதியில் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது.
ஷேக் ஷாஜஹான் மற்றும் அவரது கூட்டாளிகளால் 'இந்து பெண்கள்' பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான புகார்களை தேசிய மகளிர் ஆணையம் (NCW) இன்று சனிக்கிழமை பிப்ரவரி 10ம் தேதி கவனத்தில் கொண்டு, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியது. முன்னதாக, சந்தேஷ்காலி பகுதியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவது தடைசெய்யப்பட்டதால், பாஜக குழு ஒன்று சந்தேஷ்காலிக்குள் நுழைவதைத் தடுக்கப்பட்டது.
சந்தேஷ்காலியில் போராட்டம்
ரேஷன் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அவரது வீட்டை சோதனையிடச் சென்ற அமலாக்க இயக்குநரகத்தின் (ED) குழுவினர் கடந்த மாதம் காணாமல் போன ஷாஜஹானைக் கைது செய்யக் கோரி, உள்ளூர் பெண்கள் தலைமையில் கடந்த மூன்று நாட்களாக சந்தேஷ்காலியில் போராட்டம் நடைபெற்றது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம்: அண்ணாமலை எச்சரிக்கை!
ஷாஜஹானும் அவரது "கும்பலும்" தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதுடன், நிலத்தை பலவந்தமாக கைப்பற்றியதாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் குற்றம் சாட்டினர். இரண்டாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்ததால், உள்ளூர் பெண்கள் தங்கள் கைகளில் குச்சிகள் மற்றும் விளக்குமாறுகளுடன் சந்தேஷ்காலியின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் நடத்தினர்.
மேலும் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில், ஷாஜகானின் உதவியாளர் ஷிபோபிரசாத் ஹஸ்ராவின் வீடு அடித்து நொறுக்கப்பட்டது மற்றும் சில தளவாடங்கள் எரிக்கப்பட்டன. ஹஸ்ரா என்பவருக்கு சொந்தமான ஜெலியாகாலியில் உள்ள கோழிப்பண்ணையும் தீ வைத்து எரிக்கப்பட்டது. தங்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தில் பண்ணைகள் கட்டப்பட்டதாகவும், அங்கு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நாசவேலை தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டதாக டிஐஜி (பராசத் ரேஞ்ச்) சுமித் குமார் தெரிவித்தார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கூடுதல் இயக்குநர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மனோஜ் வர்மா, மக்கள் எப்போதும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம் என்று அவர்களை வலியுறுத்தினார்.
"அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடைபெற்று, நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில், யாராவது சட்டத்தை கையில் எடுத்தால், சட்டம் தன் கடமையை செய்யும். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது," என்றார் அவர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சந்தேஷ்காலி காவல் நிலையத்திற்கு வெளியே சில மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். சனிக்கிழமை மாலை 7 மணியளவில் ஆர்ப்பாட்டம் மீண்டும் தொடங்கும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெற்றனர். இதற்கிடையில், ஷாஜகானின் ஆதரவாளர்களும் வீதியில் இறங்கியதால் பதற்றம் மேலும் அதிகரித்தது.
NCW நடவடிக்கை
பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் அமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் குற்றச்சாட்டுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இரண்டு நாட்களுக்குள் விரிவான விசாரணை அறிக்கையை டிஜிபி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. "TMC கட்சி அலுவலகத்தில் ஷேக் ஷாஜகான், மேற்கு வங்காளத்தில் உள்ள பாசிர்ஹாட்டில் இந்துப் பெண்களை தவறான முறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் செய்திகளால் NCW ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறது.
இந்தச் சம்பவங்களைக் கண்டித்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம். உடனடியாக மாநில டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குதல், 48 மணி நேரத்திற்குள் விரிவான விசாரணை அறிக்கையை நாங்கள் கோருகிறோம் என்றும் NCW தெரிவித்துள்ளது.
உறுப்பினர் டெலினா தலைமையிலான NCW விசாரணைக் குழு இந்த விவகாரத்தில் குற்றம் நடந்த இடத்திற்குச் செல்லும்" என்று Xல் ஒரு இடுகையில் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜக மற்றும் சிபிஐ (எம்) அப்பகுதியில் அமைதியின்மையைத் தூண்டுவதற்காக மக்களைத் தூண்டுவதாக TMC கூறியது. "அப்பகுதியில் உள்ள ஒன்று அல்லது இரண்டு டிஎம்சி தலைவர்களுக்கு எதிராக அதிருப்தி இருந்திருக்கலாம். சதிகாரர்கள் அதை சாதகமாக பயன்படுத்தி பிரச்சனையை தூண்டினர். இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம், மக்களின் குறைகள் தீர்க்கப்படும்" என்று டிஎம்சி செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறினார்.
இந்த சூழலில் "சந்தேஷ்காலியில் நடந்த சம்பவம் வரப்போகும் விஷயங்களின் டிரெய்லர். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அதிக நாட்கள் நீடிக்காது" என்று பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார். CPI(M) தலைவர் தன்மோய் பட்டாச்சார்யா, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தின் "சட்டவிரோத ஆக்கிரமிப்பு" மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மை ஆகியவை பொதுமக்களின் சீற்றத்திற்கு வழிவகுத்தது என்றார் அவர்.
இதற்கிடையில், பாஜகவின் ஐடி செல் தலைவர் அமித் மாளவியா, ஷாஜஹானும் அவரது ஆட்களும் இளம், அழகான, திருமணமான 'இந்து' பெண்களை அவர்களது வீடுகளில் இருந்து கடத்திச் சென்று, அவர்களிடம் அத்துமீறுவதாகவும் குற்றம் சாட்டினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "மம்தா பானர்ஜியின் ஆட்சியின் கீழ் வங்காளத்தில் உள்ள இந்துப் பெண்கள், ஷேக் ஷாஜஹான் போன்ற முஸ்லிம் ஆண்களுக்கு விளையாட்டாக இருக்கிறார்கள்.
ஏனெனில் அவர் முஸ்லிம் வாக்குகளுக்குப் பதிலாக ஒரு பெண்ணாக தனது உணர்வுகளை அடகு வைத்துள்ளார். அவர் ஷாஜஹானைப் போலவே ஒரு குற்றவாளி." என்று காட்டமாக பேசியுள்ளார். மம்தா பானர்ஜி வெட்கித் தலைகுனிய வேண்டும். அவர் ஒரு பெண் முதலமைச்சராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் கறைபடிந்தவர் ஆவார்,” என்று அவர் மேலும் கூறினார்.