புதுச்சேரியில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மின் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த நிலையில் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறை தனியார் மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி புதுவையில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மின்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் இணைந்து தொடர் போராட்டத்திலும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு, ஐஎன்டியுசி தொழிற்சங்கம்,விசிக தொழிற்சங்கம், ஏஐடியுசி,சிஐடியு,எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றன.
தனியார் மயம் மற்றும் பணி பாதுகாப்பு தொடர்பாக சமீபத்தில் நடந்த கருத்து கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிந்தது. அதனையொட்டி, போராட்டக்குழுவினர் வரும் 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.இந்த போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் அனைத்து விதமான மின் சேவைகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின்துறை தனியார் மயமாக்கப்படாது என மாநில முதல்வர் உறுதி அளித்தால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
கடந்த மாதம் (டிசம்பர்) புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 15 தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தனியார் மயத்தை எதிர்த்து அவர்கள் தனித்தனியாக அரசுக்கு கடிதம் அளித்தனர். மின்துறை தனியார் மயமாக்கத்தால் ஊழியர்களின் பணிக்கு பாதிப்பு இருக்காது என்பதை விளக்கும் கூட்டம் அண்மையில் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மின்துறை சார்பு செயலாளர் முருகேசன், தலைமை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், சிறப்பு அதிகாரி ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு மின்துறை தனியார் மயமாக்கப்படும் போது எந்த நிலையில் இருக்கும், தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது குறித்து விளக்கி கூறினர்.
அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட சங்க பிரதிநிதிகள், புதுச்சேரி மின்துறை லாபகரமாக செயல்பட்டு வரும் நிலையில், ஏன் தனியார் மயமாக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தனியார் மய எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காண்பித்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து கூட்டத்தை புறக்கணித்து வெளியே வந்தனர். புதுச்சேரியில் மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மின் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த நிலையில் இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
