திகார் சிறைச்சாலையின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது

திகார் சிறையில் உள்ள குடிநீர் வசதி, ஒட்டுமொத்த சுகாதாரம் சிறை வளாகத்தில் உள்ள கழிவறைகளின் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட உண்மை கண்டறியும் வழக்கறிஞர் குழுவை டெல்லி உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. கைதிகளின் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் சிறைக் கம்பிகளுக்குப் பின்னாலும் நீடிப்பதாகவும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தெற்காசியாவிலேயே மிகப் பெரிய சிறை வளாகமான திகார் சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறப்படுவதை கவனத்தில் எடுத்துக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், ஒரு நபர் சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட, அவர் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையின் தீவிர தன்மையை உணர்ந்து, திகார் சிறையில் உன்னிப்பாக ஆய்வு செய்ய ஒரு சுயாதீனக் குழுவை அங்கீகரிப்பது அவசியம் என்று கருதுவதாக தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், திகார் சிறைச்சாலையின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் அமித் ஜார்ஜ், சந்தோஷ் குமார் திரிபாதி, நந்திதா ராவ், துஷார் சன்னு ஆகியோர் அடங்கிய உண்மையைக் கண்டறியும் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

சந்திரயான்3-யை நான் தான் டிசைன் செய்தேன்: டுபாக்கூர் ஆசாமியை தட்டி தூக்கிய போலீஸ்!

திகார் சிறையில் உள்ள தற்போதைய நிலைமைகளை பாரபட்சமின்றி மதிப்பீடு செய்து, குடிநீர், ஒட்டுமொத்த சுகாதாரம் மற்றும் வளாகத்திற்குள் உள்ள கழிவறைகளின் பராமரிப்பு ஆகியவற்றின் நிலையைப் பற்றி நீதிமன்றத்துக்கு அக்குழு தெரியப்படுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திகார் சிறை வளாகத்திற்குள் சுத்தமான குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார நிலைமைகளை பராமரிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி, டெல்லி உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் குழு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தது. அதில், திகார் சிறையின் சுகாதார நிலைமைகள் திருப்திகரமாக இல்லை என்றும், கழிவறைகளின் கதவுகள் பழுதடைந்துள்ளதாகவும், உடைந்த கதவுகளால் கைதிகள் பாதிக்கப்படுவதாகவும், கைதிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், இதனால் அவர்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது, சிறை வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக டெல்லி அரசின் பிரதிநிதி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இருப்பினும், மனுதாரர்களின் வழக்கறிஞர் அமித் ஜார்ஜ், சுத்தமான குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாக கைதிகள் புகார் அளித்துள்ளதாக வாதிட்டார்.