சந்திரயான்3-யை நான் தான் டிசைன் செய்தேன்: டுபாக்கூர் ஆசாமியை தட்டி தூக்கிய போலீஸ்!
சந்திரயான்3 லேண்டரை நான் தான் டிசைன் செய்தேன் என்று உதார் விட்டு திரிந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்
சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. நிலவில் இருந்து பல்வேறு தகவல்களை பிரக்யான் ரோவர் அனுப்பி வருகிறது.
சந்திரயான்3 வெற்றியடைந்ததையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தன்னை இஸ்ரோ விஞ்ஞானி போலக் காட்டிக் கொண்டு, சந்திரயான்-3 வின்கலத்தில் லேண்டரை தாம் தான் வடிவமைத்ததாக உதார் விட்டு உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த டுபாக்கூர் ஆசாமியை குஜராத் மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டர் கடந்த 23ஆம் தேதி வெற்றிகரமாக மென்மையாக தரையிறாக்கப்பட்டது. இதையடுத்து, விக்ரம் லேண்டரை தாம் தான் வடிவமைத்ததாக கூறி மிதுல் திரிவேதி என்பவர் உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடம்: சீனாவுக்கு இந்தியா கண்டனம்!
இஸ்ரோவின் “பண்டைய அறிவியல் பயன்பாட்டுத் துறையின்” உதவித் தலைவர் என தன்னை காட்டிக் கொண்ட மிதுல் திரிவேதி பிப்ரவரி 26, 2022 தேதியிட்ட போலியான நியமனக் கடிதத்தையும் தயாரித்து வைத்திருந்துள்ளார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மிதுல் திரிவேதிக்கும் இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும், அவர் இஸ்ரோ ஊழியரே இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இஸ்ரோவின் அடுத்த திட்டமான “மெர்குரி ஃபோர்ஸ் இன் ஸ்பேஸ்” என்ற திட்டத்திற்கு விண்வெளி ஆராய்ச்சி உறுப்பினர் என்ற போலி கடிதத்தையும் அவர் தயாரித்து வைத்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நிலவு பயணத்துக்கு பங்களிக்காமல், இஸ்ரோ குறித்து போலியான செய்திகளை பரப்பி, அதன் மூலம் இஸ்ரோவின் நற்பெயருக்கு அவர் களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் மூலம் ஏமாற்றுதல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 419, 465, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் மிதுல் திரிவேதி மீது குஜராத் மாநில சூரத் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.