பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் பதில் அளிக்குமாறு சிறைத்துறை டிஜிபி. ஐஜி, ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைதாகி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

அங்கு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடையாது. அனைத்து கைதிகள் போல தான் அவரும் நடத்தப்படுவார் என பல செய்திகள் வெளியாகின.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா அனைத்தையும் உடைத்தெரிந்தார். அதாவது, சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சிறைத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டை எழுப்பினார்.  

இதனால் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா போக்குவரத்து துறைக்கு அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக இருந்து உதவிய கைதிகளில் 32 பேர் அடித்து துன்புறுத்தப்பட்டு பெல்காம் சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

லத்திகளுடன் சிறைக்குள் இருந்து போலீசார் வெளியே வரும் காட்சிகளும், நடக்க முடியாமல் இருக்கும் கைதிகள் அழைத்துச் செல்லப்படும் காட்சிகளும் புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியாயின.

இதைதொடர்ந்து கைதிகள் தாக்கபட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து பதில் அளிக்குமாறு சிறைத்துறை டிஜிபி, ஐஜிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே கைதி ஒருவர் துப்பாக்கி வடிவில் உள்ள கேக்கை வெட்டி பரப்பன அக்ரஹார சிறையில் பிறந்த நாள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.