அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து, உலக அளவில் எந்த நாட்டுக்கும் செல்ல தடைவிதித்து, சொத்துக்களை முடக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

வீடோ அதிகாரம் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 3 நிரந்த உறுப்பு நாடுகள் இந்த தீர்மானத்தை நேற்று தாக்கல் செய்துள்ளன. இந்த 3 நாடுகளின் கோரிக்கையை அடுத்த 10 நாட்களுக்குள் பாதுகாப்பு கவுன்சிலின் தடைவிதிக்கும் குழு முடிவெடுக்கும். கடந்த 10 ஆண்டுகளில் 4-வது முறையாக மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி இந்தியா தீர்மானத்தை கொண்டுவந்தது. அதன்பின், 2016-ம் ஆண்டு பதான்கோட் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட மசூத் அசாருக்கு தடை விதிக்கக் கோரி,  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் பாதுகாப்பு கவுன்சிலில் 1267 தடை குழுவிடம் இந்தியா முறையிட்டது.

2017-ம் ஆண்டும் பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்தன. ஆனால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த தடை விதிக்கவிடாமல் முட்டுக்கட்டைபோட்டது. இந்நிலையில், இந்த முறை புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய மசூத் அசாருக்கு எதிராக மீண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தடை கொண்டுவர பி3 நாடுகள் முயற்சி எடுத்து தீர்மானம் கொண்டுவந்துள்ளன. இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு வேறாக இருப்பதாக கூறப்படுகிறது. மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதி என்று கூற சீனா தயங்குவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.