கர்நாடகா சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் இல்லாமல் புதிய ஆட்சியை அமைக்க பாஜக விரும்பவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.

 

16 அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவெடுக்காமல் இருக்கும் வரை ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோராது என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பாஜகவின் செய்திதொடர்பாளர் மதுசூதனன் கூறும்போது, ’’இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அம்மாநிலம் ஜனாதிபதியின் ஆட்சிக்கு கீழ் உட்படுத்தப்படும். அதாவது, அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவெடுக்க காலதாமதமாகும் நிலையில், ஆளுநர் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துறைக்கலாம், எனினும் இப்படி ஒரு சூழலில் நாங்கள் ஆட்சி அமைக்க விரும்பவில்லை’’ என அவர் கூறியுள்ளார். 

காங்கிரஸை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் மற்றும் மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என மொத்தம் 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம்  வழங்கியுள்ளனர். எனினும், ராஜினாமா குறித்து சபாநாயகர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. ராஜினாமா குறித்து சபாநாயகர்  முடிவெடுக்கும் வரை, அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். அவையின் பலமும் 225ஆகவே நீடிக்கும்  இந்த சூழ்நிலையில் பெரும்பான்மை பலம் 113 ஆகவே இருக்கும். 

மேலும் மதுசூதனன் கூறும்போது, ’’2 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவை சேர்த்தும், எங்களுக்கு 6 எம்எல்ஏக்களின் பலம் குறைவாக உள்ளது. நாங்கள் புதிய ஆட்சியை அமைத்த பின்பு, எங்களை ஆளுநர் பெரும்பான்மையை நிரூபிக்க சொன்னால், எங்களிடம் போதிய பலம் இருக்காது’’ என அவர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நடந்தது. கூட்டணிக் கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒருவர் பின் ஒருவராக தங்களது பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.

 

மேலும் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டு பாஜவுக்கு ஆதரவளிப்பதாக ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேரின் ராஜினாமா கடிதம் மீதும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல்
வைத்திருந்தார்.  

இதனால் கூட்டணி அரசுக்கு இருந்த பெரும்பான்மை 117லிருந்து 101 ஆக குறைந்தது. இதையடுத்து 105 எம்எல்ஏக்கள் கொண்ட எதிர்க்கட்சியான பாஜக குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த 18ஆம் தேதி சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் அறிவித்தார். பின்னர். கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பிறகு நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. 

இதில், குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவானது, 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி
தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.