மகாராஷ்டிராவில் வரும் 7-ம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என பாஜக அமைச்சர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 24-ம் தேதி வெளியானது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணி 104 இடங்களில் வெற்றிப் பெற்றது. பாஜக- சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். இந்தக் கூட்டணி பெரும்பான்மையை பெற்று இருந்தாலும் இரு கட்சிகளிடையே நிலவி வரும் சிக்கலால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

முதல்வர் பதவியை பாஜகவுக்கு முழுமையாக விட்டுக்கொடுக்க சிவசேனா தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆட்சியில் சமபங்கு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற நிலையில் உறுதியாக உள்ளது. ஆனால், முதல்வர் பதவியை பகிர்ந்துகொள்ள பாஜக தயக்கம் காட்டி வருவதால் குழப்பம் தொடர்ந்து வருகிறது. இதனிடையே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயலும் என்ற பேச்சி நிலவியது. ஆனால், தேசியவாத கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் மக்கள் எங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமருவதற்கே உத்தரவிட்டுள்ளார்கள் என்று கூறிவிட்டார்.

இந்த சூழலில் சிவசேனாவுக்கு, பாஜகவுடன் சேர்ந்தால் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க முடியும். சிவசேனாவுக்கும் பாஜகவைவிட்டால் வேறு வழியில்லை, பாஜகவுக்கும் சிவசேனாவை அனுசரித்து செல்லாவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் இருக்கிறது. ஆனால், ஆட்சியில் சமபங்கு கேட்டு சிவசேனா தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால், புதிய ஆட்சி அமைவது தள்ளிக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், அம்மாநில நிதி அமைச்சர் சுதிர் முங்கந்திவார் கூறுகையில், மகாராஷ்டிராவில் வரும் 8-ம் தேதியுடன் பாஜக ஆட்சி முடிவடைகிறது. ஒரு புதிய அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அமைய வேண்டும். இல்லையெனில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.  இதனிடையே, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், மகாராஷ்டிரா மக்கள் சிவசேனா கட்சியை சேர்ந்தவரே அடுத்த முதல்வராக வரவேண்டுமென விரும்புகின்றனர் என குறிப்பிட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.