இந்திய குடியரசு தலைவர் தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். அனைத்து மாநிலத்திலும், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலாவதாக தனது வாக்கைப் பதிவு செய்தார்.

முதலமைச்சரைத் தொடரந்து சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன், ராதாகிருஷ்ணன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வாக்களித்தனர். டெல்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திரமோடி குடியரசு தலைவர் தேர்தலில் தனது வாக்கை அளித்தார். 

இன்று காலை 10 மணிக்கு துவங்கிய குடியரசு தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு, மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர். 

குடியரசு தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. அன்றைய தினமே இந்தியாவின் புதிய குடியரசு தலைவர் யார் என்பது தெரிந்துவிடும்.