ஜனாதிபதி பதவியில் இருந்து  இன்னும் 5 நாட்களில் ஓய்வு பெற உள்ள பிரணாப் முகர்ஜிக்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்ந்த ‘10, ராஜாஜி மார்க்’ சாலையில் உள்ள பங்களா வேகமாகத் தயாராகி வருகிறது.

இந்த பங்களா 11 ஆயிரத்து 776 சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த பங்களாவை இப்போது புதுப்பிக்கும் பணி மிக வேகமாக நடந்து வருவதால், பிரணாப் ஓய்வு பெறுவதற்குள் முடிக்கப்பட்டு குடியேறத் தயாராகிவிடும்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் 24-ந் தேதி யோடு முடிகிறது. அதன்பின், அவர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து முன்னாள் ஜனாதிபதிக்காக அரசின் சார்பில் ஒதுக்கப்படும் வீட்டில் குடியேற வேண்டும். அந்த வகையில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டில் பிரணாப் முகர்ஜி குடியேற உள்ளார். அதற்காக அந்த வீடு இரவு, பகலாக புதுப்பிக்கப் பட்டு, தயாராகி வருகிறது.

பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை அடுத்த வாரத்தில் இருந்து முற்றிலும் மாறப்போகிறது. 200 பணியாளர்களுடன், மிகப்பெரிய மாளிகையில் கடந்த 5 ஆண்டுகளாக ராஜ வாழ்க்கை வாழ்ந்த பிரணாப் இனிமேல், அவருக்கென ஒதுக்கப்பட்ட சிறிய பங்களாவில் குடியேறுவார். வழக்கமாக வலம் வரும் துப்பாக்கி குண்டு துளைக்காத பென்ஸ் காரும் இனி பிரணாபுக்கு கிடைக்காது.

இருந்த போதிலும், கடந்த 1951ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜனாதிபதிக்கான ஊதியச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, ஏராளமான சலுகைகள்பிரணாப்புக்கு கிடைக்கும். அதன்படி, வாடகை இல்லாத சொகுசு பங்களா, இரு தொலைபேசி இணைப்புகள் (ஒன்று இணைதளம், மற்றொன்று பேசுவதற்கு), ரோமிங்வசதியுடன் கூடிய ஒரு மொபைல் போன், ஒரு சொகுசுகார், அதற்குரிய டீசல், அதை பராமரிக்கும் செலவு ஆகியவை இனி வழங்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், ஒரு தனிச் செயலாளர், ஒரு கூடுதல் செயலாளர், ஒரு உதவியாளர், இரு பியூன்கள் என அலுவலக செலவுக்காக ரூ. 60 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும். மேலும், இலவச மருத்துவ சிகிச்சை, உள்நாட்டில் எங்கு செல்லவும் இலவசமாக விமானம், ரெயிலில் உயர்வகுப்பில் பயணம், உடன் ஒருவரையும் அழைத்துச் செல்லலாம்.

முன்னாள் ஜனாதிபதிகள் தாங்கள் வாங்கிய ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவார்கள். அந்த வகையில், ரூ.75 ஆயிரத்தை ஓய்வூதியமாகபிரணாப் முகர்ஜி பெறுவார்.

முன்னாள்ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் இருந்தபோது, ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கான ஊதியங்கள் திருத்தப்பட்டதையடுத்து, ரூ.60 ஆயிரமாக இருந்த ஓய்வூதியம், ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.