புதிய குடியரசுத் தலைராக  ராம்நாத் கோவிந்த் நாளை பதவி ஏற்க உள்ளதையடுத்த ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறி பிரணாப் முகர்ஜி புதிய பங்களாவில் குடியேறுகிறார்.

கடந்த 2012–ம் ஆண்டு ஜூலை மாதம் 25–ந்தேதி ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். அவர் நாளை நாட்டின் 14–வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

இதையொட்டி ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ வசிப்பிடமான ஜனாதிபதி மாளிகையில் இருந்து இன்று பிரணாப் முகர்ஜி வெளியேறுகிறார். டெல்லி ராஜாஜி மார்க் பகுதியில் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10–ம் எண் கொண்ட அரசு பங்களாவில் அவர் குடியேறுகிறார்.

11,776 சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களா தற்போது வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. பங்களாவின் முற்றமும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பிரணாப் முகர்ஜி  ஒரு புத்தக பிரியர் என்பதால், இந்த பங்களாவில் அதிக இட வசதியுடன் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல்கலாம்,  தான் ஓய்வு பெற்றதும், இந்த பங்களாவில் தான் குடியேறி வசித்து வந்தார். 2015–ம் ஆண்டு மரணம் அடையும் வரை அவர் அங்குதான் தங்கியிருந்தார். 

பின்பு இந்த பங்களா மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜி இங்கு குடிவருவதால் மகேஷ் சர்மா தனக்கு ஒதுக்கப்பட்டு உள்ள அக்பர் சாலை 10–ம் எண் இல்லத்தில் குடியேறுகிறார்.