நண்பர் திருமணத்திற்காக நேபாளம் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி,  இரவு நட்சத்திர விடுதியில் நடந்த கேளிக்கை நிகழ்வில் கலந்து கொண்ட வீடியோ தற்போது பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த வீடியோ பதிவிட்டு பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி நிற்பதும், அவர் பக்கத்தில் நிற்கும் பெண் ஒருவர் மது அருந்துவதும் போன்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

நேபாளத்திற்கு தனது நண்பர் ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அங்கு சென்றதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “ முழு நேர சுற்றுலாப்பயணி, பகுதி நேர அரசியல்வாதி. பாசாங்குத்தனம் நிறைந்தவர்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பயணம் முடிந்து நேரம் கிடைக்கும் போது, போலி கதைகளை கூறி குற்றச்சாட்டுகளை உருவாக்கி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் என்று சாடியுள்ளார். ஐந்து மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதனை குறிப்பிட்டு பேசிய அமைச்சர், ராகுல் காந்தி இதே பாதையில் சென்றால் நிலைமை இப்படித்தான் இருக்கும் என்றார்.

இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மால்வியா கூறுகையில் ‘‘காங்கிரஸ் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கிறது. ஆனால் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டு கேளிக்கை விருந்தில் பங்கேற்றிருக்கிறார். காங்கிரஸ் தனது தலைமை பதவியை நேரு குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை. இதுபோன்ற செயலால் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். நமது நட்பு நாடான நேபாளத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அவரது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பது நமது கலாசாரங்களில் ஒன்றாகும். திருமண விழாவில் கலந்து கொள்வதில் நமது நாட்டில் குற்றம் ஒன்றும் இல்லைஎன்று தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில் ‘‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பிறந்தநாள் கொண்டாட பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றார். அழைக்கப்படாத விருந்தாளியாக ராகுல் காந்தி செல்லவில்லை. நட்பு நாடான நேபாளத்தில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி சென்றுள்ளார். இதில் பாஜகவினருக்கு என்ன அக்கறை’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Scroll to load tweet…

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் பாஜக எம்பி பிரகாஷ் ஜவடேகர் ஒரு பார்ட்டியில் கலந்து மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இது யார் என்று தெரிகிறதா..? என்று கேள்வியுள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.